போர் நிறுத்த ஒப்பந்தம்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த 11 நாட்களாக நடைபெற்ற போர் தற்போது ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. கத்தார், எகிப்து, அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை எல்லாம் இரு தரப்பினருக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்தியஸ்தம் செய்ய முன்வந்தன. தங்கள் பக்கம் ஏற்பட்ட பலத்த சேதத்தையடுத்து ஹமாஸ் மற்றும் காசாவில் உள்ள மற்ற பயங்கரவாதக் குழுக்களும் போர் நிறுத்தத்தை ஒப்புக் கொண்டதாக எகிப்து கூறியதால் இஸ்ரேலும் பரஸ்பர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டது. இதனை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் உட்பட பல உலகத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். ஹமாஸ் பயங்கரவாதிகளால் காசா பகுதியிலிருந்து அனுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகளை வெற்றிகரமாக தடுத்த இஸ்ரேலின் ‘இரும்பு டோம்’ எனப்படும் இடைமறிப்பு ஏவுகணைகள் அமைப்பை மீண்டும் புதிய வான்தடுப்பு ஏவுகணைகளால் நிரப்பித்தர அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என ஹமாஸ் பயங்கரவாத அமைப்பும், எதிரிகளின் பல முக்கிய தளங்களை மிகத்துல்லியமாகவும் வெற்றிகரமாகவும் அழித்த வகையில் இஸ்ரேலும் போர்நிறுத்தத்தை வெற்றி என்று கூறி வருகின்றனர். ‘காசா பகுதியில் இழந்த தன் செல்வாக்கை மீண்டும் உருவாக்குவது என்பது ஹமாஸுக்கு இப்போது மிகப்பெரிய சவால்’ என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.