கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதை வீட்டில் இருந்தே விரைவாகக் கண்டறியும் ‘ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட்’ என்ற கருவியை மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த ‘மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஒரு பரிசோதனை கருவியின் விலை 250 ரூபாய். மூக்கில் சளி மாதிரியை எடுத்து பரிசோதனை செய்வதன் மூலம் தொற்று இருப்பதை உறுதி செய்யும் இந்த கருவியில் 15 நிமிடங்களில் பரிசோசனை முடிவுகளை தெரிந்துகொள்ள முடியும். இந்த கருவியை கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டோருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் மட்டும் பயன்படுத்தலாம். இக்கருவியின் பயன்பாட்டுக்கு ஐ.சி.எம்.ஆர் அனுமதி அளித்துள்ளது. இந்த கருவியின் மூலம் ஒருவருக்கு தொற்று பாதிப்பு உள்ளது தெரியவந்தால் அது உறுதியாக பாசிட்டிவ் என்றே கருதப்படும். மீண்டும் பரிசோதனை தேவையில்லை. ஆனால், தொற்று அறிகுறிகள் இருந்தும் இக்கருவியின் சோதனை நெகட்டிவ் என வந்தால், தற்போது வழக்கமாக செய்யப்படும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையை மேற்கொண்டாக வேண்டும்.