கரோனா இரண்டாவது அலையில் டெல்லியில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. இதற்கு ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் பற்றாக்குறையே காரணம். இதனை சரிவர நிர்வகிக்க தெரியாத அரவிந்த் கெஜ்ரிவால்தான் பொறுப்பேற்க வேண்டும் என மக்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லி பா.ஜ.க.வின் தலைவர்களில் ஒருவரும் ‘ஹிந்து ஈகோ சிஸ்டம்’ எனும் அமைப்பின் நிர்வாகியுமான கபில் மிஸ்ரா, டெல்லி காவல் துறை ஆணையரிடம் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், ‘கரோனா தொற்றுக்கும் டெல்லி மருத்துவமனைகளில் நூற்றுக் கணக்கானோர் இறப்பதற்கும் முதல்வர் கெஜ்ரிவாலின் அலட்சியப் போக்கே காரணம். ஜெய்ப்பூர் கோல்டன், பத்ரா ஆய்வகம், கங்காராம் ஆகிய மருத்துவமனைகளுக்கான ஆக்சிஜனை முதல்வர் கேஜ்ரிவால் மாற்றி விட்டதால் தான் அங்கு உயிர்ப் பலிகள் ஏற்பட்டது. அவரது கவனக் குறைவு, விளம்பரங்களில் ஊழல், பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித் தொகையில் முறைகேடு ஆகியவை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்’ என அதில் கோரிக்கை வைத்துள்ளார். இவர் முன்னதாக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏவாக 2015 முதல் 2017 வரை இருந்தவர் என்பதும் பிறகு ஊழல் புகாரால் பதவி நீக்கப்பட்ட பிறகு 2019-ல் பா.ஜ.கவில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக கெஜ்ரிவால் மீது நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்கவில்லை, அம்மாநில எதிர்கட்சிகளான பா.ஜ.கவும் காங்கிரசும்கூட வழக்கு பதிகு செய்ய முன்வரவில்லை என நமது விஜயபாரதம் மின்னிதழில் 29 ஏப்ரல் 2021 அன்று ‘டில்லி அரசு என்பது யார்?’ என்ற தலைப்பில் மதிமுகனின் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.