கேரளா, கண்ணூர் மாவட்டம், குருவா பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் பீடி சுற்றும் தொழில் செய்யும் ஏழை தொழிலாளி. பிறவியிலேயே இரு காதுகளும் கேட்காத அவர், கரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக செலுத்த ஏதுவாக கேரள அரசின் முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு தன்னுடைய வாழ்நாள் சேமிப்புப் பணம் ரூ. 2 லட்சத்தை வழங்கியுள்ளார். அவரது கணக்கில் வெறும் 850 ரூபாய்தான் தற்போது மீதம் உள்ளது. தன் 13 வயதில் இருந்தே பீடி சுற்றி வாழ்க்கையை நடத்தி வரும் இவர் அதில்தான் சிறுக சிறுக ரூ. 2 லட்சம் சேர்த்து வைத்துள்ளார். கடந்த ஆண்டு இவரது மனைவி இறந்துவிட்டார். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ‘என் சகோதர, சகோதரிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ள பணம் இல்லாமல் தவிக்கும்போது என் வங்கிக் கணக்கில் பணத்தை வைத்திருப்பதில் என்ன பலன்? அதனால்தான் கொடுத்து விட்டேன். நான் வாழ்க்கை நடத்த அரசு மாதம் ரூ. 1,600 மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியமாக வழங்குகிறது. பீடி சுற்றும் தொழிலும் இருக்கிறது. எனக்கு அது போதும்’ என்று தெரிவித்துள்ளார். இதேபோல, கேரளாவில் கொல்லம், பள்ளித்தோட்டம் பகுதியில் வாழ்ந்து வரும் சுபைதா, தேநீர் கடை நடத்துவதுடன், ஆடுகளும் வளர்த்து வருகிறார். கரோனாவின் இரண்டாவது அலையில் மக்களுக்கு உதவும்பொருட்டு, தான் வளர்த்து வரும் ஆடுகளில் ஒன்றை முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு கொடுப்பதற்காக விற்பனை செய்தார். அதில் கிடைத்த 5 ஆயிரம் ரூபாயை கொல்லம் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியில் சேர்த்திட கேட்டுக்கொண்டார். குடும்ப பொருளாதார சுமையுடன் இதய நோயாளியான தன் கணவரின் மருத்துவச் செலவையும் கவனித்து வரும் சுபைதா, கொரோனா முதல் அலையின் போதும் மக்களுக்கு உதவ கேரள அரசின் நிவாரண நிதிக்கு பணம் கொடுத்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.