சமூகத்தில் நம்பிக்கையும் அமைதியான சூழலும் ஏற்பட வேண்டும்

சமூகத்தில் நம்பிக்கையும் அமைதியான சூழலும் ஏற்பட வேண்டும் ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொஸபலே வலியுறுத்தல்

கோவிட் தொற்றுப் பரவல் காரணமாக நம் தேசத்திற்கு மீண்டும் மிகப்பெரிய சவால் எழுந்துள்ளது. நோய்த்தொற்றின் பாதிப்பும் தீவிரத்தன்மையும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றன. தற்போது, நாட்டின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர், கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்களின் உற்றார், உறவினர்களை இழந்துள்ளன. இந்தப் பேரழிவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

நிலைமை திடீரென மோசமடைந்திருந்தாலும், சமூகத்தின் வலிமையும் மகத்தானது. கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ளும் நம்முடைய திறனை உலகமே அறியும். பொறுமை, சுய கட்டுப்பாட்டு ஒழுக்கத்துடன் கூடிய மன உறுதியைக் கடைப்பிடித்தல், பரஸ்பர உதவி ஆகியவற்றின் மூலம் தற்போதைய நிலையில் இருந்து நிச்சயமாக மீளுவோம் என்று நம்புகிறோம்.

கொரோனா தொற்றின் நிலைமை திடீரென மோசமடைந்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்ஸிஜன், தேவையான மருந்துகளின் பற்றாக்குறை ஆகியவற்றை மக்கள் எதிர்கொள்கின்றனர். பாரதம் போன்றதொரு மிகப்பெரிய தேசத்தில், பிரச்சினைகள் திடீரென விஸ்வரூபம் எடுத்து விடுகின்றன. இந்தச் சவால்களை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளும் மிகப்பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் உள்பட மருத்துவத் துறையில் உள்ள அனைவரும், முன்பு செய்ததைப் போலவே உயிரைப் பணயம் வைத்து தங்கள் பொறுப்புகளையும் நிறைவேற்றி வருகின்றனர். சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏராளமான சேவைப் பணிகளை ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள் செய்து வருகின்றனர். சவாலின் தீவிரத்தன்மையை உணர்ந்து, பல்வேறு சமூக மற்றும் மத அமைப்புகள் உள்பட ஒட்டுமொத்த சமூகமும் அனைத்து வகையிலும் உதவிகள் புரிய தானாக முன்வந்துள்ளன.

இந்த பாதகமான சூழலைப் பயன்படுத்தி நாட்டில் எதிர்மறையான சூழலையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்த பாரதத்தில் எதிர்ப்பு சக்திகள் முயற்சிகள் எடுக்கக்கூடும். நாட்டு மக்கள், இந்த நிலைமையைத் தீர்ப்பதற்கான நேர்மறையான முயற்சிகளில் ஈடுபடுவதோடு, இந்த விஷம சக்திகளின் சதித்திட்டங்களில் இருந்தும் நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க ஸ்வயம்சேவகர்கள், சமூக அமைப்புகள், ஆன்மீக அமைப்புகள், சேவை அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழில் துறையினர் அனைவரும் உடனடியாக ஆவன செய்யவேண்டும். எந்த சூழ்நிலையையும் வெற்றிகரமாக சமாளிக்க முன்வர வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். கேட்டு கொள்கிறது.

தற்போதைய நிலையில், சில விஷயங்களில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்:

ஆரோக்கியம் மற்றும் கட்டுப்பாடு தொடர்பான விதிகளைப் பின்பற்றுதல். கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் நபர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முக கவசம் அணிவது, சுகாதாரம், சமூக இடைவெளி, நிகழ்ச்சிகளில் பங்கேற்போரின் எண்ணிக்கையைக் குறைத்தல், ஊரடங்கு உத்தரவு போன்ற விதிமுறைகள் மற்றும் ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்கொள்வது, நீராவி, தடுப்பூசி போன்றவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

தேவைப்பட்டால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்லவும். அத்தியாவசியத் தேவைகளை உள்ளூரிலேயே பூர்த்தி செய்ய முயலுதல். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் உள்பட அனைத்து மட்ட நிர்வாகங்களுடனும் முழுமையாக ஒத்துழைத்தல். சமூகம் மீதான நேர்மறையான, நம்பிக்கை ஏற்படுத்தும் சூழலைப் பேணுவதற்கு ஊடகங்கள் உட்பட சமூகத்தின் அனைத்து பிரிவுகளும் பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சமூக ஊடகங்களில் இயங்குபவர்கள் கட்டுப்பாட்டுடனும் விழிப்புடனும் நல்ல விஷயங்களைப் பரப்புதல்.