கேரள மாநிலம் கொச்சி காவல்துறைக்கு கேரளா, தமிழகத்தில் கோவைப் பகுதிகளில் சிலர் ரூ. 2,000 கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, இரண்டு மாநில காவல்துறையும் இணைந்து கடந்த சில வாரங்களாக தீவிரமாக விசாரித்து வந்தனர். விசாரணையில், இதில் சம்பந்தப்பட்ட அஸ்ரஃப் அலி என்பவர் கோவையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கரும்புக்கடை வள்ளல் நகர் பகுதியிலுள்ள அஸ்ரப் அலியை மடக்கிப்பிடித்தனர். அஸ்ரப் கொடுத்த தகவலின் அடிப்படையில், உக்கடம் அல் அமீன் காலனி பகுதியிலுள்ள சையது சுல்தான் என்பவரின் வீட்டில், இரு மாநில காவல்துறையினரும் இணைந்து தீவிர சோதனை நடத்தினார்கள். அந்தச் சோதனையில் ரூ. 1.8 கோடி மதிப்புள்ள, 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கள்ள நோட்டுகள் எங்கிருந்து வந்தது, யார் யாருக்கு புழக்கத்தில் விடப்பட்டன, இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கைதான இரண்டு பேரையும் விசாரணைக்காக கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர். இந்த கள்ள நோட்டு விவகாரத்தில் சுல்தானின் கூட்டாளிகளான மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், இவர்கள் அல் அமீன் காலனி பகுதியிலுள்ள கடைகளில், கடந்த மூன்று மாதங்களாகக் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் ஏற்கெனவே, கடந்த 2018ல் 2,000 ரூபாய் பணத்தை கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ள நோட்டாகப் புழக்கத்தில் விட்ட கும்பல் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.