தமிழகத்தில், கடந்த 2020ல், கொரோனா தொற்றின்போது அதனைக் கட்டுப்படுத்த, 33 ஒருங்கிணைந்த கொரோனா சிகிச்சை மையங்கள் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டன. அலோபதி மருத்துவத்துடன் இணைந்து சித்த மருந்துகளும் வழங்கப்பட்டன. இது நல்ல பலன் அளித்தது. 29 ஆயிரம் நோயாளிகள் காப்பாற்றப்பட்டனர். மக்களிடமும் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில், தற்போது, இரண்டாம் அலை வேகமெடுத்துள்ளது. இதனையொட்டி, தற்போது, தமிழகத்தில், சேலம், திருநெல்வேலி மாவட்டங்களில் ஒருங்கிணைந்த சிகிச்சை மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. வேலுார், திருப்பத்தூரிலும் விரைவில் துவங்கப்பட உள்ளன. ஆனால், சென்னை மாநகராட்சி ஒருங்கிணைந்த சிகிச்சைக்கு எங்களை இதுவரை அணுகவில்லை. ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.