கடந்த வருட கொரோனா வைரஸின் முதல் தாக்கத்தின்போது, அவசரத் தேவைக்காக பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு வென்டிலேட்டர் கருவிகளை அனுப்பி வைத்தது. அதில், சுமார் 30 கோடி மதிப்பிலான 290 வென்டிலேட்டர்கள் பஞ்சாப் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், சுமார் ஒரு வருடம் கடந்த நிலையிலும், அந்த வென்டிலேட்டர்களில் 250 கருவிகள் இன்னமும் அந்த மாநில அரசால் பயன்படுத்தப்படாமல் தூசுப்படிந்து காணப்படுகின்றன. பஞ்சாப் அரசு மருத்துவமனைகளில் வென்டிலேட்டர்களைப் பயன்படுத்தத் தவறியது இது முதல் முறை அல்ல. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 10 வென்டிலேட்டர்கள் லூதியானா சிவில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன, ஆனால் கொரோனா தொற்றுநோய் தாக்கியபோது அது ஒரு சர்ச்சையாக மாறியபோதுதான், கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்த வெண்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த வென்டிலேட்டர்களை உள்ளூர் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒப்படைக்க முன்மொழியப்பட்டது. வென்டிலேட்டர்களில் நோயாளிகளை திறம்பட நிர்வகிக்கத் தேவையான திறமையான மனித சக்தி இல்லாததுதான் இதற்கான காரணம். இதனை, பஞ்சாப் ஹெல்த் சிஸ்டம்ஸ் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் தனு காஷ்யப் ஒரு கூட்டத்தில் தெரிவித்தார் என தி ட்ரிப்யூன் செய்தி அறிக்கை கூறுகிறது.