கடந்த ஆண்டு ஜூலையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சல்களில் 13.82 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை தூதரக தொடர்புள்ள எந்தவொரு கடத்தல் நிகழ்வும் இதற்கு முன் பாரதத்தில் நடைபெற்றதில்லை என்பதாலும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் நேரடி தொடர்பாலும் இந்த சம்பவம் கேரளாவை மட்டுமல்லாது நாட்டையே புரட்டி போட்டது. இச்சம்பவத்தில் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரன், ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கை தேசிய பாதுகாப்பு முகமையான என்.ஐ.ஏ, சுங்கத்துறை, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் விசாரித்து வருகின்றன. இதில் திடீர் திருப்பமாக, ஸ்வப்னா சுரேஷை மிரட்டி, முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாக இரண்டு எஃப்.ஐ.ஆர்-களை கேரள குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிவு செய்தனர். சட்டரீதியான விசாரணையைத் தடம் புரளச் செய்யும் நோக்கத்தில் இந்த எஃப்.ஐ.ஆர்களை கேரள காவல்துறையினர் பதிவு செய்திருப்பதாக, அமலாக்கத்துறை இந்த வழக்குப்பதிவை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய கேரள உயர்நீதிமன்றம், ‘அமலாக்கத்துறையினர் மீது கேரள காவல்துறை பதிவு செய்த இரண்டு எஃப்.ஐ.ஆர்களையும் ரத்து செய்து தீர்ப்பு கூறியுள்ளது. மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது முறையிடுவதாக இருந்தால் பணமோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தான் கேரள காவல்துறையினர் முறையிட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளதுடன், விசாரணை நிலை அறிக்கையை விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது.