தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தில் பயனாளிகளாக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி (வாள்சண்டை), எ.சரத் கமல், ஜி.சத்தியன் (மேசைப்பந்து), சி.கணபதி (பாய்மரப் படகு ஓட்டுதல்) ஆகிய நான்கு விளையாட்டு வீரர்களும், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்திலும் பயனாளிகளாக உள்ள வருண் எ.தக்கர், நேத்ரா குமணன் (பாய்மரப் படகு) ஆகியோரும் ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்து கொள்ள தேர்வாகியுள்ளனர். இத்திட்டங்களில் உள்ள வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்றல், விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு சீருடைகள் மற்றும் இதர வசதிகளுக்காக ஆண்டுக்கு முறையே ரூ.25 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் வீதம் அரசால் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழகத்தைச் சேர்ந்த இந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கம் வெல்ல தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளது.