நீரை எப்படி சேமிப்பது கையாள்வது? Reduce – Reuse – Recycle எனப்படும் மூன்று கீகள்தான் இதன்விடை. நீர்த்தேவைகளைக் குறைத்துக்கொள்ளுதல், மறு பயன்பாடு, மறு சுழற்சி என நீரைக் கையாள வேண்டும்.
நீர்த்தேவையைக் குறைக்க (Reduce) பல வழிகள் உள்ளன. குழாயைத் திறந்துகொண்டு பல்தேய்த்தல், ஷேவிங் செய்தல் முதலிய பழக்கங்களைத் தவிர்ப்பதிலிருந்து குளிப்பதற்கு ஷவரை உபயோகிப்பதும் நீர்த்தேவையைக் குறைக்கும்.
மறுபயன்பாடு (Reuse) என்பது ஒருமுறை பயன்படுத்திய நீரை மீண்டும் ஒருமுறை (சுத்திகரிப்பு எதுவும் செய்யாமல்) வேறு ஒரு பயன்பாட்டுக்காக எடுத்துக்கொள்ளுதல். உதாரணத்திற்கு வீட்டு வாஷ்பேசின் நீரை பிளஷ் டாய்லெட்டில் உபயோகித்தல்.
மறுசுழற்சி (Recycle) என்பது சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை மீண்டும் பயன்படுத்துதல். இது தற்போது நம் நாட்டில் நகராட்சி – மாநகராட்சி அளவிலும் தொழிற்சாலை அளவிலும் நடைபெறுகிறது.
விவசாயத்தில் நெல் கரும்பு சாகுபடி செய்ய நீர் அதிகம் தேவை. கம்பு, கேழ்வரகு, சாமை, குதிரைவாலி முதலான சிறு தானியங்கள் பயிர் செய்ய குறைந்த நீரே தேவை. நெல்லுக்கு மாதக்கணக்கில் பயிர் நீரில் மூழ்கும்படி நீர் நிற்க வேண்டும். இதனால் நெல்லுக்கு நீர்ச் செலவு அதிகம். நீங்கள் உங்கள் உணவில் சிறு தானியங்களை சேர்த்துக் கொள்பவரானால் நீங்கள் நீரை சேமிக்கிறீர்கள் என்று பொருள். தற்போது பரவலாகப் பேசப்படும் ஒரு விஷயம் மறைநீர் எனப்படும் Virtual Water. ஒரு பொருளை தயார்செய்ய மறைமுகமாகப் பயன்படும் நீரே மறைநீர். எடுத்துக்காட்டாக ஒரு பருத்திச் சட்டை தயாரிக்க 2,700 லிட்டர், ஒரு ஜோடி தோலால் ஆன காலணி தயாரிக்க 8,000 லிட்டர் மறைநீரும் ஒரு கிலோ இறைச்சி தயாரிக்க 15,500 லிட்டர் மறைநீரும் தேவைப்படும். ஒரு செட் ஜீன்ஸ் உடை தயாரிக்க 10,900 லிட்டர் மறைநீர் தேவைப்படும். இதை ஒரு சாதாரண பருத்தி ஆடையுடன் ஒப்பிடும்போது இது பலமடங்கு அதிகம். அதாவது மூன்று மடங்கு அதிகம். இதன் காரணமாகத்தான் நம் இளைஞர்கள் ஜீன்ஸ் உடையை துவைப்பதே இல்லை போலும்! ஒரு கோப்பை நீரை வீணாக்குவதற்கு முன் இதை எண்ணிப்பார்த்தால், நமக்கு தண்ணீர் சிக்கனத்தின் அவசரமும் அவசியமும் புரியவரும்.
இதற்கு முன்னர் இந்த உலகம் இரண்டு உலகளாவிய போர்களை சந்தித்து விட்டது மூன்றாம் உலகப்போர் ஒன்று மூளுமானால் அது நீர் பயன்பாட்டை சார்ந்துதான் இருக்கும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த பூமி நம் முன்னோர்களிடமிருந்து நாம் கடனாகப் பெற்ற ஒன்று. இதை பாதுகாப்பாக நம் வருங்கால சந்ததியினரிடம் திரும்பக்கொடுக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இதை நம் மனதில் கொண்டால் நாம் நீரை பொறுப்பாகக் கையாள்வோம் என்பதில் ஐயமில்லை.
(கட்டுரையாளர்
சுற்றுச்சூழல் மேலாண்மை தணிக்கையாளர்)