ஜோஹோவில் இருந்து உத்வேகம்

பத்ம விருது பெற்ற ஸ்ரீதர் வேம்புவின் தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ, உலகலாவிய தனது செயல்பாடுகளை தென்காசியிலிருந்து வெற்றிகரமாக இயக்கி வருகிறது. இது தமிழக அரசுக்கு தமிழகத்தின் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் ‘மினி டைடல் பார்க்’ அமைக்க உத்வேகமளித்துள்ளது. பெரிய டைடல் பூங்காக்கள் ஏற்கனவே சென்னை, கோவை, சென்னையின் புறநகர் பட்டாபிராம் என மூன்று பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளது. டைடல் என்பது அரசு நடத்தும் தமிழக தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (டிட்கோ) மற்றும் தமிழகத்தின் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் (எல்காட்) ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு முயற்சி. பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள் சிறிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மினி டைடல் பூங்காக்கள் 50,000 முதல் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் அரசு தனியார் கூட்டு முயற்சிகள் மூலம் துவக்கப்படும். முதற்கட்டமாக, விழுப்புரம், கடலூர், தேனி, சேலம் ஆகிய இடங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒரு மூத்த அரசு அலுவலர் தெரிவித்துள்ளார் என ஹிந்து பிசினஸ்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.