தமிழகத்தில் ஆளும்கட்சிக்கு எதிரான மனோநிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த இரண்டு ஆண்டுகளாக திட்டமிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்கள் தமிழகத்தை உலுக்கி எடுத்து வந்தன. ஏற்கனவே கொரோனா நோய்த்தொற்று காரணமாக வீட்டில் இருந்தபடியே ஒரு வருடமாக சம்பளம் வாங்கிய அரசு ஊழியர்கள், ஆசிரியர் என பல்வேறு அரசு உழியர் சங்கங்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தின. அவை எல்லாம் அந்தந்த அமைப்புகளின் ஊழியர்கள் நலனுக்கான போராட்டம் என்று நினைத்திருந்தோம். ஆனால் அவையெல்லாம் தி.மு.க தனது ஆதரவாளர்களை வைத்து திட்டமிட்டு நடத்தியது என்பது அவர்களின் வேட்பாளர் பட்டியல் வெளியீட்டால் மக்களுக்கு தெரியவந்துள்ளது.
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தி.மு.க வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில், யாரெல்லாம் போராளிகளாக, மக்களின் உரிமைக்காக என்று முழங்கினார்களோ அவர்களெல்லாம் தி.மு.கவின் அடிவருடிகளாக அடியாட்கள்களாக இருந்து தமிழக மக்களை ஏமாளிகளாக ஆகியுள்ளது இப்போதுதான் புரிகிறது .
சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் ஏ.எம்.வி பிரபாகர்ராஜா என்பவர் நிறுத்தப்பட்டிருக்கிறார். இவர் வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவின் மகன். ஜல்லிக்கட்டு போராட்டம் என்ற பெயரில் பொங்கல் நாளன்று தொடங்கி தமிழகத்தையே அல்லோகல்லப் படுத்திய போராட்டத்தை முன்னின்று நடத்திய சேனாபதி கவுண்டர், கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் ஹிந்து நம்பிக்கைகளை கேவலப்படுத்திய கறுப்பர் கூட்டத்தின் சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் எழிலன், சுங்கச்சாவடிகளில் அடாவடி செய்யும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் டோல்கேட் வேல் முருகன். எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்தவ பாதிரிகளின் சார்பில் கிறிஸ்தவ மக்கள முன்னணி சார்பாக இனிக்கோ இருதயராஜ் என்று அத்தனை ஹிந்து விரோதிகளையும் ஒருசேர வேட்பாளர்களாக அறிவிக்கும்போதுதான், இத்தனை காலமும் நடந்த பல்வேறு போராட்டங்களும் ஆர்பாட்டங்களும் தி.மு.கவின் தூண்டுதலாலேயே நடத்தப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.
தி.மு.க தனது தேர்தல் நடவடிக்கைகளை கவனிக்க பணியமர்த்தியுள்ள ஐ-பேக் போன்ற தேர்தல் பரப்புரை நிறுவனத்தின் அசைன்மெண்டை செயல்படுத்தும் அடிமைகளாக இந்த அமைப்புகள் இருந்து வந்துள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. தி.மு.க கும்பல்களுக்கு அடியாள் வேலை பார்த்து வந்த இவர்கள் எப்படி சாமான்யனின் குரலாக மக்கள் பிரதிநிதிகளாக செயல்படமுடியும்? மக்களை ஏமாற்றி உணர்சிகளை தூண்டி வாக்குகளை கவரமுயலும் தீயசக்தி தி.மு.க கூட்டணியை தோற்கடிப்பதன் மூலம் இந்த தேசவிரோத கும்பலுக்கு மக்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்.