மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, ‘வெற்றி வேல்.. வீர வேல்’ என முழங்கி தன் பேச்சை துவக்கினார். அப்போது, ‘இந்த மண் மீனாட்சி அம்மன் ஆலயம் அருள் புரியும் மண். நேற்று, மீனாட்சி அம்மனை சுந்தரேஸ்வரரையும் வணங்கி தரிசனம் செய்தேன். மதுரை என்றால், தமிழ் சங்கம் நினைவுக்கு வருகிறது. இந்த பிராந்திய மக்கள் வலிமையும் பரந்த மனமும் கொண்டவர்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குஜராத் சவுராஷ்டிராவில் இருந்து வந்த மக்கள் இங்கு வந்து வசிக்கின்றனர். தெலுங்கு பேசும் மக்கள் இங்கு உள்ளனர். தென் தமிழகத்திற்கு எம்ஜிஆருடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. எல்லாருக்குமான வளர்ச்சி, எல்லாருக்கும் வளர்ச்சி என்ற மத்திய அரசின் நோக்கம் 130 கோடி இந்தியர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்திற்கு ரயில்வே கட்டுமானத்தில் 238 சதவீதம் அளவு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தில், 2024க்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 16 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. விவசாயம் சார்ந்த தொழில்கள், தொழிற்சாலைகளை கொண்டுவரப்படும். உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதன் மூலம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். தமிழக இளைஞர்கள் தொழில் முனைவோராக உருவாக்க நடவடிக்கை எடுக்கிறோம். புதிய தொழில் துவங்க வருபவர்களுக்கு உதவி செய்கிறோம். மருத்துவ படிப்பில், இடங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. பொறியியல், மருத்துவ கல்வியில் தாய்மொழியில் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் சர்வதேச தரத்துடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. மத்திய பட்ஜெட்டில், மதுரை கொல்லம் பொருளாதார வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில், விமான திட்டங்கள், ரயில்வே திட்டங்கள் கொண்டுவரப்படும். கிராமங்களில் அதிவேக இணைய வசதி வழங்கப்பட்டு வருகிறது.
தி.மு.க, காங்கிரஸ் கட்சியிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், அவர்கள் பொய் சொல்வதில் கெட்டிக்காரர்கள். காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், ஜல்லிக்கட்டை முழுமையாக தடை செய்வோம் எனக்கூறியது. இதற்காக தி.மு.க காங்கிரஸ் வெட்கப்பட வேண்டும். தமிழக மக்கள் ஜல்லிக்கட்டு வேண்டும் எனக்கூறிய போது, அ.தி.மு.க கொண்டு வந்த சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கிடைக்க மத்திய அரசு உதவி செய்தது. காங்கிரஸ் அமைச்சர் ஒருவர், ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டிதனமான விளையாட்டு எனக்கூறினார். வேலை செய்யாமல் இருப்பது, அடுத்தவர்கள் வேலை செய்தால் குறை கூறி இட்டு கட்டுவதில் காங்கிரசும், தி.மு.கவும் தேர்ந்தவர்கள். மதுரையில் எய்ம்ஸ் கொண்டு வருவது குறித்து காங்கிரஸ், தி.மு.க சிந்திக்கவில்லை. இவர்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும். மீண்டும், மீண்டும் பெண்களை அவமானப்படுத்துவது காங்கிரஸ், தி.மு.கவின் இயல்பு’ என பேசினார்.