மத்திய அரசின் உயரதிகாரிகளுக்கு என தனியாக மின்னஞ்சல் முகவரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் வாயிலாகவே அவர்களுக்கு உத்தரவுகள், சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதனை தேசிய தகவல் மையம் பராமரித்து வருகிறது. மத்திய அரசின் தகவல்களை அறிவதற்காக, இணையத் திருட்டில் ஈடுபடுவோர், அரசு அதிகாரிகளின், மின்னஞ்சலுக்கு போலியான பெயர்களில் செய்திகள் அனுப்புகின்றனர். இதனை திறந்ததும், அவர்களில் மின்னஞ்சலில் ஊடுருவி, முக்கிய தகவல்களை அவர்கள் திருடுகின்றனர். பாதுகாப்பு இருந்தாலும் சமீப காலமாக இந்த தகவல் திருட்டு அதிகரித்துள்ளது. இதனை தடுக்க மின்னஞ்சலில் இரட்டை பாதுகாப்பு முறையை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முறையில், அரசு ஊழியர்கள், இரண்டு பாஸ்வேர்ட்களை பதிவு செய்தால் மட்டுமே, அவர்களது மின்னஞ்சலை அணுக முடியும். இதனால், தகவல் திருட்டை தடுக்க முடியும் என கூறப்படுகிறது.