அன்பான சகோதரியே,
‘லட்சியத்தை நோக்கி’ – இந்த சொற்றொடர் மனதில் சில நாட்களாக வந்துபோய்க் கொண்டிருந்தது. அதற்குவடிவம் தரவே இந்தக் கட்டுரை. லட்சியத்தை நோக்கி எனில், பெரிதாக, சிறப்பாக எதையோ சாதிக்கத் தீர்மானமான வைராக்கியம் கொள்ளுதல் எனக் கூறலாம். காரணம் அதை அடைய கடுமையாக முயலவேண்டும், உழைக்கவேண்டும்.
நான் தாயான பிறகு எனது நம்பிக்கைகள், மதிப்புகள், அணுகுமுறை எல்லாமே மிக அழகாக, சிறப்பாக மாறிவிட்டன. ஆம், நானும் குழந்தையாக, பருவப்பெண்ணாக, கல்லூரி மாணவியாகப் பற்பல லட்சியங் களைக் கொண்டிருந்தேன். ஆனால், எதைச் செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்து எனது சிறுசிறு லட்சியங்களை அடையக் கடுமையாக முயன்றேன். இன்னமும் லட்சியங்களைக் கொண்டிருக்கிறேன்!
வாழ்க்கையில் பல விஷயங்கள் மாறி விட்டன. எங்களை நம்பி இன்று ஒரு சிறு ஜீவன் இருக்கிறது. அவனது உலகமே நாங்கள்தான். எங்களது உலகமே அவன்தான். அவனுக்காக என்னுடைய எல்லாவற்றையும் தருவேன். யாருடையநிர்பந்தமும் இல்லாமல் என் குழந்தைக்காக என் வேலையை விட நானேதான் முடிவு செய்தேன். அப்படிச் செய்ததை நினைத்து இன்று நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன், பெருமை கொள்கிறேன். இல்லத்தரசியாக இருப்பதைத் தாழ்வாகக் கருதும் தாய்மார்களை காண்கிறேன். அவர்களுக்கு வீட்டிலேயே முடங்கிய தாய்மார்கள் (Stay at Home Mothers) என வேடிக்கையான பெயர் உண்டு (SAHM). இது ஏற்புடையது அல்ல. எனக்கு இன்னமும் லட்சியங்கள் உண்டு என்றேனே, அவை குறையவில்லை. மாறிவிட்டன, கூடிவிட்டன. இதோ அந்தப் பட்டியல். என் குழந்தைக்கு சிறந்த பாதுகாப்பைத் தரவேண்டும். என் குழந்தைக்கு சிறந்த குடும்பச் சூழலைத் தரவேண்டும். என் குழந்தையை நல்ல மனிதனாக உருவாக்கவேண்டும். என் குழந்தை சரியானவற்றை விரும்பும்படி வளர்க்க வேண்டும். என் குழந்தையை ஒரு நல்ல மனிதநேயமுள்ள குடிமகன் ஆக்கவேண்டும்.
என் குழந்தைக்கு நல்ல உணவளிக்க வேண்டும். என் குழந்தையோடு நன்றாக வாழ்ந்து அவனை மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்ளவேண்டும். இன்னும் என்னென்னவோ. இதிலும் என்னால் முடிந்தளவுக்கு சிறப்பாகச் செய்யவேண்டும். இல்லத் தரசியாக இருப்பது எளிதான சேவையே அல்ல. ஆனால், பெருமளவில் நன்மையில் முடியக்கூடியது. கடுமையான முயற்சியும், ஓய்வில்லா உழைப்பும் கொண்டது. அதனால் எல்லா SAHMகளுக்கும் ஒரு கோரிக்கை. உங்கள் தலையை நிமிர்த்தி நடங்கள். நீங்கள் உதாரணப் பெண்மணிகள். நிமிர்ந்து பார்க்கப்பட வேண்டியவர்கள். வணங்கப்பட, போற்றப்பட, பின்பற்றப்பட வேண்டியவர்கள். இந்த லட்சியப் பட்டியல் போதாது எனக்கு. இன்னும் அதிக லட்சியத்துடன் இருப்பேன். எனக்குப் பிடித்த விஷயங்கள், செய்யவேண்டியவை என்னும் பட்டியல் இருக்கிறது. அதை நிச்சயம் செய்து முடிப்பேன். ஆனால், எக்காரணம் கொண்டும் குடும்பத்தை விட்டுத்தரமாட்டேன். இதுதான் எனக்கான பெருமை, மதிப்பு.
பெண்களும் ‘லட்சியங்களும்’.
தாய்மை ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. ஆனால், நாம் பெண்ணாக இருக்கப் போகிறோமா, தாயாக இருக்கப்போகிறோமா என்னும் தேர்வு நமது கையில்தான் இருக்கிறது. வேலையையும் குடும்பத்தையும் சிறப்பாக சமமாகக் குறைவின்றிப் பார்த்துக்கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பெரிய வணக்கம். அது சாதாரண விஷயமே அல்ல. இதுபோன்ற பல்துறை நிபுணத்துவத்தை யாரிடமிருந்து கற்றோமோ அவர்கள் அனைவரையும் வணங்க வேண்டும்.
இதுபோல பெரும் தியாகங்களைச் செய்யும் தாய்மார்கள் இருக்கிறார்கள். இது எதையுமே செய்ய முடியாதவர்களும் இருக்கிறார்கள். அவர்களைக் குறைவாக மதிப்பிடவேண்டிய அவசியமில்லை. அவர்களது நிலையென்ன என நாமறியோம். தாய்மை என்பது பெண்களுக்குத் தரப்படும் சவால். இந்தப் பயணம் எங்களது வாழ்க்கையில் ஆழமான தடங்களை விட்டுச்செல்ல வைக்கிறது. பலதரப்பட்ட நிலைப்பாடுகள், வெவ்வேறு மதிப்பீடுகள், வெவ்வேறு குடும்பங்கள் இன்னும் பல. ஆனால், குடும்பங்கள் எல்லாம் இதற்காக உறுதுணையாக நிற்கின்றன.
ஒருவருக்கு இன்னொருவர், உனக்காக நான், எனக்காக நீ என்று. இந்த நீண்ட பயணத்தில் பல ரம்மியமான கடற்கரைகளும், மேடுபள்ளப் பாதைகளும், அமைதியான சோலைகளும், பிரம்மிப்பூட்டும் மலைப்பிரதேசங்களும் வரும். அடுத்தென்ன வரப்போகிறது எனக் கணிக்க முடியாத அற்புதப் பயணம் இது! எல்லா தாய்மார்களுக்கும் இந்த நேரத்தில் நமது அன்பைத் தருவோம், மதிப்பைத் தருவோம், பாசத்தைத் தருவோம், நேசத்தைப் பகிர்வோம். வருங்காலத்தில் ஒரு நாள் குழந்தையோடு நேரம் செலவழித்தப் புகைப்படங்களை எடுத்துப் பார்க்கும்போது கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவிக்கத் தயாராக இருக்கும் எத்தனையோ ஆசிர்வதிக்கப்பட்ட தாய்மார்களுள் ஒருத்தியாக நீங்களும் வரமுடியும்.
-வைஷ்ணவி ஹரிஹரன்