பாரத தேவியின் தவப்புதல்விகள்

ஒரு நூற்றாண்டிற்கு முன்பே, பங்கிம் சந்திரர், நமது தாய் நாட்டை வந்தே மாதரம் என்று வணங்கினார். அன்னை என்ற சொல்லுக்கு அளப்பறிய மகத்துவம் கொடுத்திருப்பது நமது தேசமே.
சரித்திரத்திற்கு அப்பால் வழங்கும் தொன் மக்கள் காலத்தில், பாரத மகன் வழிபாடு தொடங்கிய காலத்திலிருந்தே தெய்வத்தை அன்னை என்று வணங்கினான். அன்றிலிருந்து எவ்வளவு சக்தி பீடங்கள்! இவையாவும் இறை நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் நமக்கு தந்திருக்கின்றன! சக்தியை வழிபடுவது, நமது (ப்ரம்மபுத்ரா நதிதவிர) நதிகளுக்கு பெண்ணெனப் பெயரிட்டு போற்றுவது என்பதெல்லாம் கண்டு மகிழ்ந்தவர் சகோதரி நிவேதிதை. அதனால் தான் போலும், அன்றிலிருந்து இன்றுவரை பாரத தேவியின் தவப்புதல்விகள் பரம்பரையை நாடெங்கும் காண்கிறோம். அவர்களில் ஒரு சிலரையேனும் நாம் அடிக்கடி நினைவு கூர்ந்து, அவர்களது அடிச்சுவட்டில் நடந்திடப் பழக வேண்டும்.

வேத காலத்தில் ரிஷிகளைப்போன்று ரிஷிகைகளும் இருந்தனர். அபாலா, கோஷா, கோதா, சாஸ்வதி, லோபாமுத்ரா என்று பலர். இதுபோன்று புத்த மதமும் பல ஆன்மிக ஒளிகளை நமக்குத் தந்திருக்கிறது. குண்டலகேசி எனும் பழந்தமிழ் நூல் அப்படியொரு புத்தமதப் பெருமைகள் பற்றியது. அவளது வாழ்க்கை ஐம்பெருங்காப்பியத்தில் ஒன்று.

எனினும், இப்பொழுது அந்த நூல் கிடைக்கவில்லை. குண்டலகேசி வாழ்வினை தைரியமாக எதிர்கொண்டவள்; வாதிட்டு பெரும் புலவர்களை வென்றவள். இந்த காப்பியத்திலிருந்து கிடைத்த ஒரு சில செய்யுட்கள் அற்புதமான நல்வழி காட்டிகளாகத் திகழ்கின்றன. சமண மதத்திலும் இப்படி தவத்தில் ஈடுபட்ட பெண்மணிகள் இருந்துள்ளனர். சீவக சிந்தாமணியில் வரும் விஜயை போதுமே! என்ன பொறுமை, என்ன தவ வாழ்க்கை, மகன் அரசனாகிய பிறகு, சற்றும் மனம் வாடாமல், அவனை ஆசிர்வதித்தபின், உலக வாழ்வினைத் துறந்து விடுகிறாள்.

பக்தி நெறியில் நாம் முதலில் காண்பது ஆண்டாள். ‘மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே’ என்று, கண்ணனையே வரித்து, இறைவனுடன் ஐக்கியமான பொன்மகள். அவளது திருப்பா வையும் நாச்சியார் திருமொழியும் வலம்புரி முத்து போன்றவை. பன்னிரு திருமுறையில் காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் பக்தி, சாந்தி, சிவ பக்தியை மக்களிடையே வளர்த்து வந்திருக்கின்றன.

இதுபோல் காஷ்மீரில் ஞானப்பாலை மக்களுக்கு அளித்து சைவத்தை வளர்த்தவர் லல்லேச்வரி (லால் தேட்) எனும் பாரதத்தின் அருந்தவப் புதல்வி. காஷ்மீர் மொழியின் முதல் கவிதாயினிகளில் ஒருவராகக் கருதப்டும் இவரது “வாக்குகள்” இனிமையும், ஞானமும் இணைந்து இருக்கின்றன.
“இறைவா! நான் செய்வதெல்லாம்
உனக்கு பூஜையாகிவிடுகிறது.
நான் பேசும் பேச்செல்லாம் உனக்கு துதியானது.
என் உடல் பெற்ற அனுபவங்கள் யாவும்
சிவ தந்த்ரம் கூறும் சிவ தத்துவமே;
பரமசிவனை சந்திக்கும் வழி காட்டலே.”
ராஜஸ்தானில் கிருஷ்ண பக்தி மூலம் மக்களை தெய்வீக வழியில் அழைத்துச்சென்று பெண்குலத்திற்கு பெருமை சேர்த்தவர் மீரா பாய். பாரதப் பெண்ணின் பெருமை ஆன்மிகம் மட்டுமல்ல, விளக்கேற்றி இறை வணக்கம் செய்வது மட்டுமல்ல, அவள் பாரத கலாச்சாரத்திற்கே காவல் தெய்வமாக இருப்பவள். பாரதப் பெண் அன்னையாக பொறுமையுடன் குழந்தைகளை சிறப்பாக வளர்த்து வந்திருப்பதுதானே இந்தியாவின் பெருமை? சிவாஜியின் தாய் ஜிஜாபாய் வளர்த்த வளர்ப்பினால் பாரதத்தின் சனாதன தர்மம் பிழைத்தது என்பதை மறக்கமுடியுமா?
சமயம் வந்தால் சங்க காலத்திலிருந்து பாரதப்பெண் நாட்டைக் காப்பாற்ற எதிரியுடன் போராடத் தயங்கியதில்லை. சுபத்ரா ‘குமாரி சவுஹானின் ஜான்சி கி ராணி என்ற ஹிந்திப்பாடல் என் செவியில் எப்பொழுதும் ஒலித்துக்கொண்டிருக்கும்.

தில்லியில் ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் இருந்தபோது, கருணாமயி அப்ரோல் எனும் பாடகி பாடுவதை கேட்டு மகிழ்வேன். புகழ் பெற்ற கருணாமயி தன் வாழ்வினை ஆசிரமத்தில் சேவை செய்வதற்காக அர்ப்பணித்தவர். எங்களுக்கு வந்தே மாதரம் பாடலை முழுமையாக துடிப்புடன் பாடக் கற்றுக் கொடுத்தார்.

காஷ்மீரில் பிறந்த இந்த தவப்புதல்வி; எங்களுக்கு தேசபக்தியை முழுமையாக காட்டியவர். ஆர்மோனியத்தினை எடுத்துக் கொண்டு, ‘சிம்ஹாசன் ஹில் உடே’ என்று அவர் தொடங்கும்போது அந்த அறையில் இருந்த ஆண்களும் பெண்களும் ஒரே குரலாக அப்பாடலைப் பாடும்போது ஆஹா! அந்த நாளும் வந்திடாதோ? இதோ சில வரிகள்:
“சிம்ஹாசன் ஹில் உடே ராஜ் வம்சனே
ப்ருகுடி தானி தீ;
சிம்மாசனம் ஆடியது, ராஜ வம்சத்தின் வாரிசுகள் புருவம் வளைந்தது; முதிர்ந்த பாரதத்தில் ஒரு புதிய இளைஞர் அலை வீசியது. அனைத்து இந்தியர்களுக்கும் தாம் இழந்த ` சுதந்திரத்தின் பெருமை இப்பொழுது தெரியவந்தது. அனைவரும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க தயாராகினர்.பழைய கத்திகள் இப்புதிய 1857 ஆண்டில் சுதந்திரம் வேண்டின. புண்டேல்கண்டின் நாட்டுப்புறப் பாடல்கள் பாடுவோரும், சமயப்பாடகர்களான ஹர்போலர்களும் இப்
பொழுது ஜான்சி ராணியின் பெருமையை பாடுவதை கேளுங்கள். அந்த வீரத்திருமகள் எப்படி ஆண்மகன் போல் -போரிட்டாள் என்பதைக் கேளுங்கள்.”
வாழிய பாரத மணித்திருநாடு! வந்தே மாதரம்!