ஓ.டி.டி. உச்ச நீதிமன்றம் வேதனை

ஓ.டி.டி தளமான அமேசான் பிரைமில் ‘தாண்டவ்’ இணைய தொடர் வெளியாகியது. இத்தொடரின் காட்சிகளில் ஹிந்துக் கடவுள்கள், பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என கூறி தேசம் முழுவதும் அமேசான், அதன் பாரதப் பிரிவுத் தலைவர் அபர்ணா புரோஹித் மீதும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனை எதிர்த்தும் முன் ஜாமீன் கேட்டும் அபர்ணா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதிகள் அமர்வு ‘ஓ.டி.டி தளங்களில் ஆபாச காட்சிகள் அதிகமாக இடம் பெறுகின்றன. அதைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை. இதற்கு கட்டுப்பாடுகள் விதித்து மத்திய அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அது குறித்த தகவலை, தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகே முன்ஜாமின் மனு மீதான விசாரணை நடக்கும்’ என தெரிவித்துள்ளது.