ஆன்மிக புரட்சியாளர் பங்காரு அடிகளார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூரில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலை நிர்மாணித்தவர் பங்காரு அடிகளார். இவர் அக்கோயிலின் பக்தர்களால் அன்புடன் ‘அம்மா’ என அழைக்கப்படுகிறார்.

இக்கோயிலில், கருவறைக்கு பெண்கள் சென்று வழிபாடு செய்ய முடியும். மேலும், பெண்கள் தங்களின் மாதவிடாய் காலங்களில்கூட இங்குள்ள கருவறைக்குள் சென்று வழிபாடு செய்யமுடியும். இப்படி, பெண்களுக்கு முக்கியத்துவம், தமிழில் வழிபாடு, கோயிலுக்கு வரமுடியாதவர்கள் வீட்டின் அருகிலேயே ஆதிபராசக்தியை வழிபட, ஆங்காங்கு வழிபாட்டு மன்றங்கள், சபரிமலை போலவே இருமுடி செலுத்துதல், அந்த இருமுடியை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என வயது வித்தியாசம் இல்லாமல் விரும்பும் யாரும் செவ்வாடை அணிந்து இருமுடி செலுத்தும் முறை என பல புதுமைகள் புகுத்திய ஒரு ஆன்மிக புரட்சியாளராக, ஆன்மிக குருவாக பங்காரு அடிகளார் திகழ்கிறார்.

பாமர ஹிந்துக்கள், தங்களது ஆன்மிகத் தேவைக்கான தேடுதலில் இருந்தபோது அதனை கிறிஸ்தவ மிஷனரிகள் பயன்படுத்திக் கொண்டனர். அவர்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றியும் வந்தனர். இதனை தமிழகத்தில் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியதில் பங்காரு அடிகளாருக்கும் பெரும் பங்கு உண்டு. மக்கள் ஏறக்குறைய மறந்திருந்த பஞ்சபூத வழிபாட்டை மீண்டும் உயிர்ப்பித்தவர் இவர்.

ஆன்மிகத்திற்கு இல்லறம் ஒரு தடையாக இருக்காது என வாழ்ந்து நிரூபித்து வரும் பங்காரு அடிகளாருக்கு, ஆன்மிகவாதிகளில் ஒரு தனி இடம் உண்டு. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் ஆன்மிகத்தை மட்டும் வளர்க்கவில்லை அது கல்வி, கலாச்சாரம், மருத்துவம், தொண்டு என பல்வேறு வகைகளில் மக்களுக்கு சேவை செய்து வருகிறது.

இவருக்கு நம் மத்திய அரசு ‘பத்மஸ்ரீ’ பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மோடியை, பங்காரு அடிகளார் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்காரு அடிகளாரின் பிறந்த தினம் இன்று

 

  • ஜெ.எஸ். ஸ்ரீதரன்