இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், அதற்கு எதிராக முஸ்லிம் சமூகத்தை, தவறாக வழிநடத்தும் பயங்கரவாத இயக்கங்கள், அரசியல் சூழ்ச்சியாளர்களை கண்டித்தும், தமிழக பா.ஜ., சார்பில், மாவட்ட தலைநகரங்களில், நேற்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னையில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், நடிகர் ராதாரவி பேசியதாவது:இந்தியாவை காப்பாற்ற, நாம் இங்கு நிற்க வேண்டியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தால், இந்தியாவில் உள்ள, 130 கோடி பேருக்கும் பிரச்னை இல்லை. அவர்கள், இங்கு உள்ளவர்களுக்காக போராடவில்லை; வெளியில் இருந்து வந்த வர்களுக்காக போராடுகின்றனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, போராட்டம் நடத்துவதை, மக்கள் விரும்பவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை, வெளியில் அனுப்பி தான் தீர வேண்டும். சட்டசபை விவாதத்தில், ‘தமிழகத்தில், முஸ்லிம் யாராவது பாதிக்கப்பட்டுள்ளனரா’ என, முதல்வர் கேட்டால், பதில் அளிக்காமல், எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்கின்றனர்.
இந்தியா இருந்தால் தான், தமிழகம் இருக்கும். குடியுரிமை திருத்த சட்டம் இருக்கும் வரை தான், நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள் என்பதை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.துாண்டிவிட்டு, இந்தியாவை கூறுபோட நினைக்க வேண்டாம். தமிழகம் காப்பாற்றப்பட, பிரதமர் மோடி கரத்தை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், மாநில பொதுச் செயலர் நரேந்திரன், சென்னை கோட்ட பொறுப்பாளர் சக்கரவர்த்தி ஆகியோர், தலைமை செயலகம் சென்றனர். அங்கு தலைமை செயலர் சண்முகத்தை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து, இல.கணேசன், நிருபர்களிடம் கூறியதாவது:பா.ஜ., சார்பாக, தமிழகம் முழுவதும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேரணி, ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைநகரங்களில், கலெக்டர்களை சந்தித்து, கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில், தலைமை செயலரை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தோம். அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை, வலியுறுத்தி உள்ளோம். காவல் துறை மீது கூட, வன்முறை தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள், மத கலவரங்களை துாண்டும் வகையில், ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்தி பேசுகின்றனர்.
அமைதியான தமிழகத்தை, கலவர பூமியாக்க துடிக்கும் தீய சக்திகள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று, வலியுறுத்தி உள்ளோம்.வன்முறையை துாண்டக்கூடிய போராட்டங்களை தடுக்க வேண்டும் என்பது தான், எங்கள் கோரிக்கை. குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த முடியாது எனக்கூற, யாருக்கும் அதிகாரம் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.