பயங்கரவாத நிதியுதவியை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் – ஐ.நா-வில் இந்தியா ஆவேசம்

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்தி உள்நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை அகற்ற பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாக். குற்றம்சாட்டியிருந்தது. இதை மறுத்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர குழுவின் முதன்மை செயலர் விமர்ஷ் ஆர்யன் பேசியதாவது: உலக நாடுகளின் அனைத்து கூட்டங்களிலும் இந்தியா குறித்து தவறான தகவல்களை அளித்து சர்வதேச சமுதாயத்தை திசை திருப்ப பாக். முயற்சிக்கிறது.அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜம்மு காஷ்மீர் முன்னேற்றத்தை சீர்குலைக்க பாக். பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளித்து வருகிறது. இந்நிலையிலும் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் ஜம்மு காஷ்மீர் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. பாக். பத்து அம்சங்களை பின்பற்ற வேண்டும் என இந்தியா கோருகிறது.

முதலாவதாக பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி நிறுத்தப்பட வேண்டும். பாக்.கில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்கள் அகற்றப்பட வேண்டும். காஷ்மீரில் சட்டவிரோதமாக ஆக்ரமித்த பகுதியில் இருந்து பாக். வெளியேற வேண்டும். மத வழிபாடு சட்டத்தை தவறாக பயன்படுத்தி சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறையை நிறுத்த வேண்டும். ஹிந்து, சீக்கியர், கிறிஸ்தவர் உள்ளிட்ட சிறுபான்மையின பெண்களை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்வதை தடுக்க வேண்டும்.பாக். பிற நாடுகளில் தற்கொலைப் படையாக செயல்படவும் பயங்கரவாத செயல்களை மேற்கொள்ளவும் சிறுவர்களை தேர்வு செய்கிறது. இதை நிறுத்த வேண்டும். சிந்து பலுசிஸ்தான் போன்ற மாகாணங்களில் அரசுக்கு எதிராக கருத்து கூறும் பத்திரிகையாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் காணாமல் போகின்றனர் ; படுகொலை செய்யப்படுகின்றனர். இதை பாக். தடுக்க வேண்டும்.

உள்நாட்டில் ஜனநாயகத்தை காக்க நிலையான சீர்திருத்தங்களை செய்ய வேண்டும். பாகிஸ்தானில் மனித உரிமைகள் எப்படி மதிக்கப்படுகின்றன என்பது பற்றி உலகுக்கு தெரியும். அன்னிய சக்திகளின் சீர்குலைப்பு முயற்சிகளுக்கு மத்தியிலும் இந்தியா சிறுபான்மையினர் உட்பட அனைத்து மக்களின் நலன் காத்து ஜனநாயக நெறிமுறைகளை பின்பற்றி வருகிறது. இதுவும் உலக நாடுகளுக்கு தெரியும்.ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு அங்கம். இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்து கருத்து கூற இஸ்லாமிய கூட்டமைப்புக்கு எந்த தகுதியும் கிடையாது. தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து சரிவர ஆராயாமல் பெல்ஜியம் கருத்து கூறியுள்ளது. இந்தியாவுக்கு மிக நெருக்கமான பெல்ஜியம் சரியாக ஆராய்ந்து முடிவுக்கு வர வேண்டும் .இவ்வாறு கூறினார்.