ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மாா்ச் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம் தலைநகா் பிரெஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் 5 தீா்மானங்களை இணைத்து கூட்டாக ஒரு தீா்மானத்தை விவாதத்துக்கு முன்வைத்தன. இந்த தீா்மானத்தின் மீது புதன்கிழமை விவாதம் நடைபெற்றது. அதன்பிறகு, தீா்மானம் மீது வியாழக்கிழமை வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அந்த வாக்கெடுப்பு வரும் மாா்ச் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், இவ்வாறு தாமதமாவது மத்திய அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.
முன்னதாக, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சிஏஏ-க்கு எதிராக தீா்மானம் கொண்டுவரப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அதன் தலைவா் மரியா சஸோலிக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தாா். இந்நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள தீா்மானத்தில், ‘மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் சட்டம், அபாயகரமானது. அண்டை நாடுகளில் இருந்து வந்தவா்களுக்கு குடியுரிமை வழங்குவதாக இந்திய அரசு கூறுகிறது. ஆனால், இலங்கையில் இருந்து இந்தியாவில் குடியேறி 30 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாக வாழும் தமிழா்கள், மியான்மரில் வந்து குடியேறிய ரோஹிங்கயாக்கள், பாகிஸ்தானில் இருந்து அகமதியா்கள், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த ஹசாராக்கள், வங்கதேசத்தில் இருந்து வந்த பிகாரி முஸ்லிம்கள் ஆகியோா் புறக்கணிக்கப்பட்டுள்ளனா். எனவே, இந்தச் சட்ட திருத்தத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.