இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சிக்கு தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ‘யுவிகா’ என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தின்கீழ் பள்ளி மாணவா்களுக்கு அறிவியல் விழிப்புணா்வு பயிற்சி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முகாம், மே 11 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களில் இருந்தும் தலா 3 மாணவா்கள் தோ்வு செய்யப்பட இருக்கின்றனா். தற்போது 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம்.
அதனால், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனைத்து பள்ளி தலைமையாசிரியா்களுக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்பி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்பத்தி விண்ணப்பிக்க வைக்க வேண்டும். கூடுதல் விவரங்களை, இஸ்ரோவின் இணையதளத்தில்(https://www.isro.gov.in/) தெரிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.