குருவாயூர் நாராயணீய நாள்

ஸ்ரீமன் நாராயணீய மஹாத்மியம்

குருவாயூர் என்றாலே கூடவே நினைவுக்கு வருபவர் ‘நாராயணீயம்’ எழுதிய மேல்பத்தூர் நாராயண பட்டதிரி ஆவார். . குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணனை முன்னிறுத்தி, பாகவதத்தின் சாரமாக, வட மொழியில் பக்தி சொட்டச்சொட்ட எழுதப்பட்ட கிருஷ்ண காவியமே ‘நாராயணீயம். பரசுராம சேஷத்திரம்', என்ற புராணப் பெருமையுடனும் , காட்ஸ் ஓன் கண்ட்ரி என்று சமீபகாலமாக ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் இயற்க்கை அழகு திகழும் கேரள மாநிலத்தில் உள்ளது குருவாயூர்.

இறையருளால் இளம் பிராயத்திலேயே அனைவரும் அதிசயக்கும் படியான அறிவு, ஆற்றல், பாண்டித்யம் பெற்றுத் திகழ்ந்தார் பட்டதிரி .அச்சுத பிஷரோடி இவரது குரு.. தனக்கு இலக்கணம் போன்றவற்றைக் கற்றுக்கொடுக்கும் குரு – வாதரோகம் என்ற நோயினால் கஷ்டப்படுவதைக் கண்டார் பட்டதிரி. குருவிற்கு குரு தட்சணை அளிக்கும்
நேரமும் வந்தது. தமது நன்றிக்கடனாக குருவைத்தொற்றியுள்ள நோய் அவரை விட்டு விலகி தன்னைப்பற்றிக் கொள்ளட்டும் என்று கடவுளிடம் மண்டாடி வேண்டிக்கொண்டு தானே வலிய வரவழைத்துக்கொண்டார்.

 

 

துஞ்சத்து எழுத்தச்சன் மலையாள மொழியில் அக்காலத்தில் பிரபல கவிஞராக விளங்கியவர். இளமைப்பருவத்தில் இருந்த அந்த நோய் நீங்கும்பொருட்டு இவரை அணுகினார் பட்டதிரி. அவர் அறிவுறுத்தலின்படி, ஸ்ரீ குருவாயூர் தலத்திற்கு வந்து ஸ்ரீ குருவாயூரப்பன் சந்நிதியில் ஸ்ரீமத் பாகவத சரித்திரத்தை வடமொழி சுலோகங்கள் மூலம் விளக்கிக் கூறி வழிபட்டுத் துதி செய்தார். நோயின் தாக்கத்தினால் கைகள் எழுத முடியாத நிலையில் பட்டத்திரி சொல்லச் சொல்ல அவரது தம்பி ஓலைச்சுவடியில் எழுதி நமக்கு அளிக்கப்பட்டதே ஸ்ரீ மந்நாராயணீயம் என்னும் வரப்பிரசாதம் ஆகும்.

1034 வடமொழி சுலோகங்களால் ஆனது 'ஸ்ரீமந்நாராயணீயம் குருவாயூரப்பன் சந்நிதியில் தினமும் பத்து சுலோகங்கள் வீதம் (ஒரு தசகம்) 100 தசகங்களில் நாராயணீயத்தை பாடி முடித்தார் நாராயண
பட்டதிரி. அவ்வாறு பாடி பூர்த்தி செய்து குருவாயூர் கிருஷ்ண பகவான் பாதத்தில் சமர்ப்பித்தார். அவரது பக்திக்கு கட்டுண்ட ஸ்ரீகுருவாயூரப்பன் அவ்வப்போது தன் தலை அசைப்பின் மூலம் அவரது தோத்திரங்களை அங்கீகாரம் செய்தாராம். அதுவும் பிரகலாத சரித்திரத்தை, பட்டதிரி வர்ணிக்கும்போது
மூலஸ்தானத்திலிருந்து சிங்கத்தின் கர்ஜனைக் கேட்டதாம். (நரசிம்மனாகக் காட்சியளித்ததாகவும் கூறப்படுவது உண்டு).

புகழ்பெற்ற ஸ்ரீகுருவாயூரப்பன் ஆலயத்தில் நடைபெறும் வருடாந்திர உற்சவ தினங்களில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் ஸ்ரீமந் நாராயணீய தினம் என்று விசேஷமாக கொண்டாடப்படுகின்றது.
ஸ்ரீமந்நாராயணீத்தின் 421ஆவது வருடாந்திர விழா இம்மாதம் 14ஆம் தேதி நடைபெறுகிறது. நாராயணீயம் நாள் என்று இந்த நாள் அனுஷ்டிக்கப்பட்டு, பக்தி சிரத்தையுடன் கொண்டாடப்படுகிறது. 1586ஆம் ஆண்டு விருச்சிகம் 28ஆம் நாளில் ஸ்ரீ பட்டதிரி அவர்கள் ஸ்ரீமந்நாராயணீய காவியத்தை கிருஷ்ணன் பாதங்களில் சமர்ப்பித்து அனைவருக்கும் பெருமை கொடுத்த நாள் இது. டிசம்பர் ஆறாம் தேதியிலிருந்தே நாராயணீய சப்தாகம் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது குருவாயூர் அப்பனை தரிசனம் செய்ய சில மணித்துளிகள் என்ன, பல மணித்துளிகள் காத்திருக்கக் கூட காத்திருத்தலில் பக்தர்கள் பெருமையே கொள்கின்றனர். குழந்தைகளை தோளில் கிடத்தியும், உட்காரும் ஆசனங்களில் கிடத்தியும் மக்கள் குஞ்சு கிருஷ்ணன் தரிசனித்தற்காக ஏங்கும் பரவச நிலையை என்னென்பது?வரிசையில் நிற்போர் களைத்திராமல் இருக்க இலவச நீர் வழங்கப்படுகிறது. இவ்வூருக்கு விடியற்காலம் என்றால் உஷத்காலம் என்று சொல்லும் அளவுக்கு பக்தர்கள் பின்னிரவிலேயே நீலபாலனின் நிர்மால்ய தரிசனம் காண
வரிசையில் நிற்பது பக்தி சிரத்தையின் ஆழத்தை அறியலாம். இங்கு வரும் பக்தகோடிகள் வாக்கு, மனது, உடம்பு அனைத்திலும் ஸ்ரீ மந்நாராயணீயம் நாம சங்கீர்த்தனம் ஆகியவை அவர்கள் தினசரி வாழ்வில் ஒன்றோடிய ஆன்மிகத்தின் விரிவாக்கம் என்று சொன்னால் மிகையாகாது.

தமிழ்நாடு கேரளா விலுள்ள பல ஊர்களிலும் ஏன் உலக அளவிலும் அன்றாடம் ஸ்ரீமன் நாராயணீயம் வகுப்புகள் பல கோவில்களிலும், இல்லங்களிலும் தினசரியோ வார இறுதி நாட்களிலோ தொடர்ந்து
நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

 

இந்த புனித தலம் குழந்தைக் கோலத்தில் பக்தர்களுக்கு அருளும் தலம். எனவே, குழந்தைகள் நலன் குறித்த சிறப்புத்தலமாக போற்றுவது இயற்கைதானே?
வருடத்தின் அனைத்து நாட்களிலும் அன்னப்ராசனம் எனப்படும் சோறு ஊட்டும் நிகழ்ச்சி (சோறூனு – மலையாளத்தில்) நடைபெறுகிறது. குழந்தை வேண்டித் தவம் இருப்பவர்கள், தங்களுக்குக் குழந்தை பிறந்தால், இங்கு வந்து சோறு ஊட்டுவதாக வேண்டிக் கொள்கிறார்கள். குறிப்பிட்ட இந்த வேண்டுதல்கள் நிறைவேறியதும் பிரார்த்தனையை நிறைவேற்ற இங்கு வந்து சேவிக்கிறார்கள். தவிர, கிருஷ்ணன் சந்நிதியில் சோறு ஊட்டினால், தமது பிள்ளைகள் நோய் நொடி இன்றி தேக ஆரோக்கியம் பெற்று அருள் புரிவான் ஸ்ரீ குருவாயூரப்பன் என்கின்ற முழு நம்பிக்கை.

ஓம் நமோ பகவதே ஸ்ரீமன்நாராயணாய

நாராயணீய நாள்   டிசம்பர் 14, 2019