சரித்திரம் படி சரித்திரம்படை- பாகம் 2

சென்ற வாரம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உயர்கல்வி துறைக்கான 15வது உச்சி மாநாட்டில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றினார். அதனை ஒட்டி, சென்றவாரம் 3ம் தேதி இதே தலைப்பில் பாகம் 1ல் கட்டுரையாளர் சரித்திர பாடத்தின் மீது இளைஞர்களுக்கு ஆர்வம் ஏன் ஏற்படுத்த வேண்டும் என்பதை விளக்கியிருந்தார். சரித்திரம் பற்றி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கண்ணோட்டமும் அணுகுமுறையும் மாற்றுவதற்கு அவருடைய இந்த பகுதியில் சொல்ல முயற்சிக்கிறார்.

இனி மேலே படிக்கலாம் …

ஓருவர் தன்னுடைய பாரம்பரிய சொத்துக்களை வேறுயாரோ அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தால் அதை மீட்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பாரல்லவா? அதேபோல நம் நாட்டின் பண்டைய பெருமைகள் அந்நிய படையெடுப்பாளர்களால் மறைக்கப்பட்டிருந்தால், புராதனச் சின்னங்கள் புதையுண்டு போயிருந்தால், சிலைகள், கலைப் பொருள்கள் போன்றவை அயல்நாட்டிற்கு கடத்தப்பட்டிருந்தால் அவற்றை மீட்க முயற்சிப்போம். அதற்கு அடிப்படை இழந்த சொத்துக்கள் என்ற அறிவு வேண்டும், விவரங்களைத் திரட்ட வேண்டும் என்ற ஆர்வம், வரலாற்றுப் பெருமை எல்லாம் வேண்டும்.

எடுத்துக்காட்டாக, கடலடியில் புதைந்து போயுள்ளது வாரகை பற்றியும், கீழடியில் ஆராய்ச்சி ஆரம்பக்கட்ட நிலையிலையே சங்க கால நாகரீகத்தைப் பற்றியும் வெளிவந்துள்ள விவரங்கள் நமக்கு பெருமிதத்தை அளிக்கின்றன. இதைத்தான், மஹாகவி ” நாமிருக்கும் நாடு நமதென்பது அறிந்தோம், இது நமக்கே உரிமை என்பதறிந்தோம் ” என்று பெருமிதம் பொங்க கூறினார். அவரே தன்னுடைய சுயசரிதையில் ஆங்கில கல்வியின் காரணமாய் ‘ கம்பன் என்றோர் மானுடன் வாழ்ந்ததும் ‘ என்று தொடங்கி நம் முன்னோர் பெருமைகளை அறிந்து கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று நொந்து இவை மாற்றப்பட வேண்டும் என்று பல இடங்களில் நம்மவர்களுக்கு வரலாற்று ஆர்வமும் பார்வையும் தேவை என்று கூறினார்.

இளம் வயதிலேயே சரித்திரத்தின் மீது ஈடுபாடு வரவேண்டும் என்றால் (குறைந்தது அப்பாடத்தின் மீது இழிவான நோக்கு போக வேண்டும்), அதற்கு பெரும் பொறுப்பு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களிடமும், நிர்வாகத்திடமும் பெற்றோர்களிடமும் உள்ளது.

பிறரை மாற்றுவதற்கு முன், மாணவர்கள் தங்கள் அளவில் சரித்தரைப் பற்றிய தங்களுடைய அணுகு முறையை மாற்றிக் கொள்வது நலம் பயக்கும்.  வயிற்றுப்பாட்டுக்காக, அறிவியலோ, வணிகவியலோ, பொருளாதாரமோ, சட்டமோ எது வேண்டுமானாலும் படிக்கலாம். எங்கெங்கு இரண்டாம் வாய்ப்பாக வரலாற்றை பாடமாக எடுத்துப் படிக்கலாம். உதாரணமாக,  இந்திய ஆட்சிப்பணித் தேர்வுகளில் ( Civil Services ) சரித்திரப் பாடத்தை இரண்டாம் பாடமாக எடுத்து எழுதலாம்.

அதைக்கூட விட்டு விடுங்கள், மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் ஓய்வு நேரத்தில் குறிப்பாக விடுமுறை நாட்களில் சரித்திர நூல்களை நூலகங்களில் எடுத்து படிக்கலாமே. எங்கள் தலைமுறையினரையினர் மிக எளிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டோம். என்ன தெரியுமா? கல்கி, சாண்டில்யன், அகிலன், ஜெகசிற்பியன் போன்றோர் எழுதிய சரித்திர நெடுந்தொடர்கள் தான் அவை.

சரித்திரம் படிப்பது எந்த துறையாயிருந்தாலும் பயன்தெரியும். அந்த அந்த துறையின் முன்னோர்களின் சுய சரிதையை, விஞ்ஞானனிகள் – பல துறை விற்பன்னர்களின் வாழ்க்கை வரலாற்றைப்ப டித்தால் ஒருவர் தானும் அத்தகைய சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று ஊக்கம் பிறக்கும். எத்தகைய முன்னேற்றத்தை தனி நபருக்கும் சமுதாயத்திற்கும் சரித்திரப் பார்வைவிளைவிக்கும்?

ஆவணப்படுத்துவது ஒவ்வொரு துறையினருக்கும் தனியார்- அரசுத்துறை- தொண்டு அமைப்பு எல்லாவற்றிற்கும் தேவை. ஒரு எடுத்துக்காட்டைப் பார்க்கலாம். ஒரு நிறுவனம் ஒரு புதிய மின்சாதனத்தையோ அல்லது சலவைத்தூளையோ தயாரிப்பதற்கான ஆராய்ச்சியில் இறங்குகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அம்முயற்சியில் சில மாதங்கள், ஓரளவிற்கு நிதியையும் செலவழித்த பின்னர் நிறுவனம் எவ்வளவு தூரம் இலக்கை நோக்கி முன்னேறியுள்ளோம் என்று பரிசீலிப்பார்கள். மேலும் இந்த ஆராயச்சித் திட்டத்தில் ஈடுபட வேண்டுமா வேண்டாமா இல்லை தள்ளிப் போட வேண்டுமா என்று முடிவெடுக்கும்.எந்த முடிவு எடுத்தாலும், காரணம், பின்னணி, கற்றுக் கொண்ட பாடங்கள் எல்லாவற்றையும் தெளிவாக ஆவணப்படுத்த வேண்டும். ஒரு வேளை திட்டத்திற்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அப்பொழுது விட்ட இடத்திலிருந்து தொடங்குவதற்கு பழைய நிகழ்வுகள் பற்றிய விவரங்கள் ஆவணப்படுத்தியிருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

ஆகவே சரித்திரம் படித்தல் புதிய சாதனைகளை நடத்திக்காட்டி புதிய சரித்திரம் படைக்க வழி வகுக்கும்.

படித்து ஊக்கம் பெறுதல் எடுத்துசொல்லுதல்- நம் தலைமுறையும் வரும் துலைமுறையினரையும் உற்சாகபபடுத்துதல்

நாமும் சாதித்துக் காட்டுதல்