சங்கப் பயிற்சி முகாமில் தொடர்ந்து 29 வருடங்கள்

ஆர்.எஸ்.எஸ் சாமானியர்களையும், அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர், சங்கத் தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, எளிய வாழ்க்கை வாழ்ந்து, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வரும், நாகராஜன் அவர்களைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…

 

சுவாமிநாதன் − ராஜலட்சுமி தம்பதியினருக்கு மகனாக, 1959 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் நாள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராஜ மன்னார்குடியில் பிறந்தார், நாகராஜன். அவருடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள். தந்தை குன்னியூர் பண்ணை எஸ்டேட்டின் மேலாளராக பணியாற்றினார்.
தனது பள்ளிப்படிப்பை மன்னார்குடியில் உள்ள நேஷனல் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தார். தொடர்ந்து மேல்படிப்புக்காக 1974 ஆம் ஆண்டு, சென்னைக்கு குடியேறியனார். பி.யூ.சி படிப்பை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியிலும், துரைப்பாக்கத்தில் உள்ள டி பி ஜெயின் கல்லூரியிலும் பட்டப்படிப்பை முடித்தார். அதனைத் தொடர்ந்து 1981 ஆம் ஆண்டு, பஞ்சாப் நேஷனல் வங்கி பணியில் சேர்ந்தார். தொடர்ந்து 2018 வரை என 37 ஆண்டு காலம், அதே வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
ஆர்.எஸ்.எஸ் என்றால் என்ன என்று தெரியாத நிலையில், மயிலாப்பூரில் உள்ள சித்திரைக்குளத்தில் நண்பர்களுடன் விளையாடுவார். அங்கே சிலர் தினமும் வருவார்கள். ஆடிட்டர் எஸ் குருமூர்த்தி, ஸ்டேட் பேங்க் ரகுராமன் போன்றவர்கள் சர்வ சாதாரணமாக நாகராஜன் அவர்களுடன் நெருங்கிப் பழகுவார்கள். 1980களில் நிறைய வங்கி ஊழியர்களை கார்யகர்த்தர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மயிலாப்பூர் மற்றும் மாம்பலம் பகுதிகளில், சுமார் 10க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் சேர்ந்து சங்கப்பணி செய்தனர்.
1979ம் வருடம் சங்கத்தின் மூத்த பிரச்சாரக்கான இராம கோபாலன் ஜி, சிவராம் ஜி போன்றவர்கள் பேசி பழகும் விதத்தால் பெரிதும் கவரப்பட்டார். சென்னை கோட்ட பிரச்சாரக்காக இருந்த ரவி ஜி அவர்களின் பேச்சில் ஈர்க்கப்பட்டார்.
இந்து முன்னணி கூட்டத்திற்கு சென்று அங்கு இராம கோபாலன் ஜி, சு சிதம்பரம் ஜி போன்ற ஆளுமைகளின் சிறப்புரை மனதில் தாக்கத்தை ஏற்படுத்தின. ஒரு சமயம் 5 நாள் தொடர் பௌத்திக் வர்கவில் 100 ஜி, ஹர்பகவான் தாஸ் ஜி, பேராசிரியர் அண்ணாமலை ஜி போன்றவர்கள் பேச்சால் கவரப்பட்டு, சங்க வேலையை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற ஆர்வம் படிப்படியாக வளர்ந்தது.
காஞ்சிபுரம், வேலூரில் நடந்த ஷிபிருக்கு சென்னையிலிருந்து ராமாராவ் ஜி மற்றும் சிலருடன் சைக்கிளில் சென்ற அனுபவம், ஆர்வத்தை மேலும் தூண்டியது. ஒரு கட்டத்தில் மயிலாப்பூர் பகுதியில், 21 ஷாகாக்கள் நடக்கும். சூரிஜி மற்றும் பல அதிகாரிகள் தொடர்ந்து வந்து ஊக்கமளித்தார்.
சங்கப் பிரச்சாரக்கான சண்முகநாதன் அவர்களின் “வேடனும் புறாவும்” கதை, 1% ஊக்கம் (Inspiration) 99% உழைப்பு (Perspiration) போன்ற வாசகங்கள், அதிகமான நேரம் சங்கப்பணி செய்ய வேண்டும் என்ற உறுதியை, மனதில் கொழுந்து விட்டெரியச் செய்தது.
1993 ஆம் ஆண்டு, சென்னை சங்க அலுவலகத்தில் குண்டு வெடிப்பு, 1995ல், இந்து முன்னணி அலுவலகம் குண்டுவெடிப்பு போன்ற சம்பவத்தால், சங்கப்பணியில் மேலும் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
1988, 1990, 1992 ஆண்டுகளின் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் வருட சங்கப் பயிற்சி முகாமை முடித்த பின்னர், திருவல்லிக்கேணி பாஹ் ஷாரீரிக் பிரமுக் ஆனார். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை தோறும் சிவராம் ஜி, திருவல்லிக்கேணி வருவார்கள். அவரை சைக்கிளில் அமர்த்தி, திருவல்லிக்கேணியை வலம் வந்து பல குடும்பங்களை நேரில் சந்தித்த அனுபவம், அந்த துறைக்கு வலுவான அடித்தளமும், வீட்டுத் தொடர்பின் (சம்பர்க) முக்கியத்துவத்தையும் புரிய வைத்தது, அவருடன் சென்ற நாட்கள் வாழ்வின் பொன்னான தருணங்கள்.
1980களில், அகில பாரத நுகர்வோர் அமைப்பான (ஏ.பி.ஜி.பி) இயக்கத்தின் சென்னை கிளை துவக்கப்பட்ட போது, ஏழு வருடங்கள் சென்னை மாநகர செயலாளராக இருந்து, சிவராம்ஜியின் குறிப்பை சிரமேற்கொண்டு சிறப்பாக செயல்பட்டு, ஏ.பி.ஜி.பி சென்னை கிளை வளர்ந்து, 14 கிளைகள், 250 உறுப்பினர்கள் என்ற உச்சத்தைத் தொட்டது. மொத்த விலையில் மளிகைப் பொருட்கள் வாங்கி, நுகர்வோருக்கு லாபநோக்கம் இல்லாமல் பிரித்துக் கொடுப்பது, சில விற்பனையாளர்கள் மேற்கொள்ளும் தவறுகளை சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்வது போன்ற பணிகளை, அகில பாரத நுகர்வோர் அமைப்பு மேற்கொண்டது.
நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் அதிகம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் முயற்சியில், சங்கம் மற்றும் S-VYASA, பெங்களூரு ஏற்பாட்டில் 2015, 2016 ஆம் ஆண்டுகளில் “சர்க்கரை நோயில்லா பாரதம்” என்பதை மையமாகக் கொண்டு, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வகையிலான யோகாசன தொகுப்பை ஷாகாவிலும், பொதுமக்களுக்கும் கற்றுத் தரும் குழுவில் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தார்.
புதியதாக சங்கத்திற்கு சேர விரும்புபவர்களுக்கான “ஜாயின் ஆர்.எஸ்.எஸ்” (Join RSS) பொறுப்பை சில காலம் கவனித்துக் கொண்டார். மென்பொருள் ஊழியர்கள் வாரம் ஒருமுறை சந்திக்கும் வகையிலான (ஐ.டி. மிலன்) துறையை சங்கப்பிரச்சாரக் வீரேந்திராவுடன் இணைந்து 2 வருடங்கள் கவனித்துக் கொண்டார்.
சென்னையில் ஏற்பட்ட சுனாமி, வெள்ளம் நிவாரணம் மீட்புப் பணிகள் போன்ற சங்க சேவை காரியங்களில் ஈடுபட்டு உள்ளார். சங்கப் பணியை தொடர்ந்து செய்து கொண்டு வரும் நாகராஜன் அவர்கள் தற்போது மடிப்பாக்கத்தில், தனது அண்ணன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
யோகா பயிற்றுனர், அறிவுசார் துறை பொறுப்பாளர் (பௌத்திக் பிரமுக்), முகாம் உதவியாளர் (ப்ரபந்தக்) என தொடர்ந்து, 29 வருடங்கள் சங்கப்பயிற்சி முகாம்களில் இருந்துள்ளார். திருவல்லிக்கேணி பாஹ் உடற்பயிற்சி பொறுப்பாளர், செயலாளர், சென்னை மாநகர பொறுப்பாளர் என பல பொறுப்புகள் வகித்துள்ள நாகராஜன் அவர்கள், நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.

அ.ஓம்பிரகாஷ்