55,052 தினசரி ஷாகாக்கள் நடைபெறுகின்றன ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தகவல்

கல்வியையும், மருத்துவத்தையும் வியாபாரமாக கருதும் போக்கு அதிகரித்து வருவது நல்லதல்ல. மேலே குறிப்பிட்டப் போக்கை கட்டுப்படுத்தவும், மட்டுப்படுத்தவும் அரசு உரிய விதிமுறைகளை காலந்தாழ்த்தாமல் வகுக்க வேண்டும். கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் சங்க ஸ்வயம்சேவகர்கள் ஆற்றிவரும் பணி பாராட்டுக்குரியது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் அகில பாரதிய காரியகாரணி மண்டல் பைட்டக் நடைபெற்றது. இது நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். சர்கார்யவாஹ் தத்தாத்ரேய ஹொசபலே பேட்டியளித்தார்.

இப்பேட்டியின் போது அகில பாரதிய பிரச்சார் பிரமுக் சுனில் அம்பேகர், சஹ பிரச்சார் பிரமுக்குகள் நரேந்திர தாக்கூர், பிரதீப் ஜோஷி ஆகியோர் உடனடிருந்தனர். ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே கூறியதாவது:

கார்யகாரணி மண்டல் கூட்டத்தில் சர்சங்கச்சாலக் மோகன் பாகவத், 6 சஹ சர்கார்யவாஹ்கள், கார்யவிபாக் பிரமுக்குகள், 46 பிராந்த சங்கச்சாலக்குகள் என மொத்தம் 397 கார்யகர்த்தர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் விஜயதசமி உரையின்போது
ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் மோகன் பாகவத் எழுப்பிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நாக்பூரில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர். தலாய்லாமாவும் வாழ்த்து தெரிவித்தார். சங்கம் 100 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டது. நாக்பூரில் நடைபெற்ற பதசஞ்சலனில் 14,101 ஸ்வயம்சேவகர்கள் கலந்து கொண்டனர். நாடுமுழுவதும் 25,000 இடங்களில் நடைபெற்ற பதசஞ்சலனில் 32,45,141 பேர் சங்க சீருடையில் கலந்து கொண்டனர். இதில் பெரும்பாலானோர் 40 வயதுக்கு குறைவானவர்கள்.

தற்போது நாடுமுழுவதும் 59,343 மண்டல்கள் உள்ளன. இதில் 50,096 மண்டல்களில் பல்வேறு சங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 37,250 மண்டல்களில் பணிகள் வெகு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மாநகரங்களிலும், நகரங்களிலும் உள்ள பகுதிகளில் 40,686 பஸ்திகளில் சங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடுமுழுவதும் விஜயதசமி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

புதிதாக 9,626 இடங்களில் சங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது 55,052 இடங்களில் தினசரி ஷாகாக்கள் நடைபெறுகின்றன. 32,262 இடங்களில் வாரக் கூடுதல் நடைபெறுகின்றன.
80,000 ஹிந்து சம்மேளனங்கள் நடத்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் 45,000, நகரப் பகுதிகளில் 35,000 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டுத் தொடர்பு (கிரக சம்பர்க அபியான்) திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான வீடுகளுக்கு ஸ்வயம்சேவகர்கள் செல்கின்றனர். நாட்டுக்கு ஆற்ற வேண்டிய பணியை எடுத்துரைக்கின்றனர். இதுதொடர்பாக பிரசுரங்களையும் வழங்குகின்றனர். பகவான் பிர்ஸா முண்டாவின் 150வது பிறந்த ஆண்டு நிறைவு நவம்பர் மாதம் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. வந்தேமாதரம் தேசியப் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் ஆகின்றன. இப்பாடலை காங்கிரஸ் மாநாட்டின் போது ரவீந்திரநாத் தாகூர் பாடினார். 1975ல் நூற்றாண்டு விழா கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் அப்போது நெருக்கடி நிலை அமலில் இருந்ததால், இது கொண்டாடப்படவேயில்லை. இதன் முக்கியத்துவம் குறித்து இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியம்.

நக்சல் பிரச்சினை குறித்து விஜயதசமி உரையில் ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் மோகன் பாகவத் குறிப்பிட்டுள்ளார். மனந்திருந்திய நக்சல்கள் திருந்தி வாழ நாம் உதவி செய்கிறோம், தொடர்ந்து உதவ வேண்டும்.

இளைஞர்களிடம் போதைப் பொருள் பழக்கம் அதிகமாகி விட்டது. எய்ம்ஸ், ஐ.ஐ.டி பல்கலைக்கழக விடுதிகள் போன்றவற்றில் எல்லாம் கூட, போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து வருகிறது. விஷ்வ ஹிந்து பரிஷத், ஏ.பி.வி.பி போன்ற நமது சக அமைப்புகள் வாயிலாக போதைப் பொருள் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பாதிக்கபட்டவர்களை மீட்கவும் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும்.

பஞ்சாப் மாநிலத்தில் கட்டாய மதமாற்றம் அதிகரித்து வருகிறது. பிற மதத்துக்கு சென்றவர்களை தாய் மதத்துக்கு நாம் திரும்ப அழைக்க வேண்டும். சீக்கியர்களை மதம் மாற்றுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கடும் கண்டத்துக்கு உரியது. கட்டாய மதமாற்றத்தை தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேற்கு வங்காளத்தில் நிலைமை நாளுக்குநாள் மோசமாகி வருகிறது. அங்கு வன்முறை அரசியல் உக்கிரமடைந்துள்ளது. பங்களாதேஷிலிருந்து சட்டவிரோதமாக ஊடுருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்குள்ள அரசு இதற்கு அனுசரணையாக செயல்பட்டு வருகிறது.

வங்காள மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். வங்காளத்தில் சமூக நல்லிணக்கம் தழைக்க ஸ்வயம்சேவகர்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். அரசு ஆதரவுடன் விஷமிகள் மேற்கொள்ளும் தகாத நடவடிக்கைகளை முறியடிக்க வேண்டியது நமது கடமையாகும்.

கல்வியையும், மருத்துவத்தையும் வியாபாரமாக கருதும் போக்கு அதிகரித்து வருவது நல்லதல்ல. மேலே குறிப்பிட்டப் போக்கை கட்டுப்படுத்தவும், மட்டுப்படுத்தவும் அரசு உரிய விதிமுறைகளை காலந்தாழ்த்தாமல் வகுக்க வேண்டும். கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் சங்க ஸ்வயம்சேவகர்கள் ஆற்றிவரும் பணி பாராட்டுக்குரியது. இவ்வாறு தத்தாத்ரேய ஹொசபலே கூறினார்.

ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி