இலட்சிய ஏடுகளின் பட்டியலில் தனித்தன்மையுடன் பிரகாசித்து வரும் ‘விஜயபாரதம் தேசிய வார இதழ்’ வழக்கம் போல, இவ்வருடமும் தீபாவளி சிறப்பிதழை வெகு சிறப்பாக வெளியிட்டுள்ளது. 1925ஆம் ஆண்டு டாக்டர் ஹெட்கேவாரால் தொடங்கப்பட்ட ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் 100வது ஆண்டு விழாவையொட்டி வெளியிடப்பட்டுள்ள விஜயபாரதம் தீபாவளி இதழ், அகிலம் போற்றும் சங்கத்தின் அடல் கெழுமிய சிங்கநாதமாக உச்ச சும்பீரத்துடன் ஒலிக்கிறது.
விஜயபாரதம் தீபாவளி இதழில் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் மிளிர்கின்றன. மறைந்த தலைவர் இல.கணேசனின், அனுபவங்களைச் சொல்லும் ‘விடிந்த கரை’ என்றென்றும் பசுமையாகவே இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. கவிஞர் குழலேந்தி, கவிஞர் சுராகி, சேலம் வைஜெயந்தி மாலா, தமிழ் நாயகி உள்ளிட்டோரின் கவிதைகள் மலருக்கு பொலிவூட்டுகின்றன.
கோ.ஸ்தாணுமாலயன். இரா. வன்னிய ராஜன், எஸ்.ஆர். சேகர், எஸ்.எஸ்.மகாதேவன், வானதி சீனிவாசன். பேராசிரியர் கனகசபாபதி, ஆர்.பி. முருகேசன், ஈரோடு சரவணன், செங்கோட்டை ஸ்ரீராம். பசுத்தாய் கணேசன், காந்தாமணி நாராயணன் உள்ளிட்டோரின் கட்டுரைகள் ஈர்ப்பு மிக்கவையாக விளங்குகின்றன. திருப்பூர் கிருஷ்ணனின் ‘சிதம்பர ரகசியம்’ ராஜேஷ்குமாரின் ‘தேடு கிடைக்கும்’, பசு. தனபாலனின் ‘மாசில்லா உலகம்’, ஆதலையூர் சூர்யகுமாரின் பருத்திப் பூக்கள் பூக்கின்றன’ உள்ளிட்ட சிறுகதைகள் தீபாவளி மலரை அலங்கரிக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் அர்த்தமும், ஆழமும் நிறைந்த அறிவுப் பெட்டகமாக, விஜயபாரதம் தீபாவளி மலர் மட்டற்ற எழிலுடன் விளங்குகிறது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இந்த தீபாவளி மலர் நூற்றாண்டு சிறப்பு மலராக கொண்டு வரப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த விதம் குறித்து ராஜேஷ், முனைவர் இரா.வன்னியராஜன் ஆகியோர் சுருக்கமாக விவரித்துள்ளனர். சம்ஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம், பெண்களுக்கு முக்கியத்துவமின்மை போன்றவை குறித்தும் அகில பாரத நிர்வாகி (பிரச்சார் பிரமுக்) சுனில் அம்பேகர் பேட்டியில் விரிவாகக் கூறியுள்ளார்.
இயக்கம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளுடன் குடும்பங்களில் அறநெறிகள் குறித்த விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாத்தல், அந்நிய மோகத்தை அகற்ற சுயத்தன்மை, ஜாதி மோதல், தீண்டாமையை அகற்ற சமுதாய நல்லிணக்கம், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றை பொதுமக்களிடையே கொண்டு செல்ல ஆர்.எஸ்.எஸ் முடிவு செய்துள்ளது.
அதற்கேற்ப குடும்பங்களில் அறநெறி விழிப்புணர்வு குறித்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, பேராசிரியர் ப.கனகசபாபதி, ஜனனிரமேஷ், சுற்றுச்சூழல் பாதுகாத்தல் குறித்து ஜெயஸ்ரீ சாரநாதன், புதுகை ச.பாரதி, சமுதாய நல்லிணக்கம் குறித்து குருசுப்ர மணியன், ஆத்தூர் பாலாஜி, சுயத்தன்மை குறித்து ராஜா பரத்வாஜ், ஆடிட்டர் சுந்தரம், கர்னல் தியாகராஜன், குடிமக்களின் கடமைகள் குறித்து முனைவர் க.குமாரசுவாமி, வெ.இன்சுவை உள்ளிட்ட பலரும் வெவ்வேறு கோணங்களில் விளக்கி உள்ளனர். சமுதாயப் பணியில் அனைவரின் பங்களிப்பையும் வலியுறுத்தும் வகையில் இந்த மலர் தயாரிக்கப்பட்டுள்ளது.
தேசிய வளர்ச்சி மற்றும் குடும்ப அமைப்பின் சிறப்பை மையமாக வைத்து விஜய பாரதம் தீபாவளி சிறப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்க நுாற்றாண்டு சிறப்பிதழாகவும் மலர்ந்துள்ளது.
நாட்டு வளர்ச்சியின் முக்கியத்துவம், பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்ள உறுதித்தன்மை, தற்சார்பு சார்ந்த வளர்ச்சியின் சிறப்பு குறித்து கட்டுரைகள் அதிக அளவில் உள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் கடமை குறித்த கருத்துக்களும் உள்ளடங்கியுள்ளன.
துறை சார்ந்த வல்லுனர்களின் கட்டுரைகள், அந்தந்த பொருண்மை சார்ந்த அறிவை விரிவாக்க உதவுகின்றன. அவை பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கின்றன. ஹிந்து மதம் கடைப்பிடிக்கும் சிறப்பு அம்சங்களை கூறுகின்றன. தேசியத்தின் சிறப்பு, தெய்வீகத்தின் பெருமையை எடுத்துரைத்து தேசிய உணர்வை வளர்க்கிறது விஜயபாரதம் தீபாவளி மலர்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு நிறைவாக இந்த ஆண்டு தீபாவளி மலர் வெளிவந்துள்ளது. குடும்ப நலன், சமுதாய நல்லிணக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுயசார்பு, குடிமக்கள் கடமை என 5 கருத்துக்களை பற்றி பல்வேறு தலைப்புகளில் அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ளது மலரை சிறப்பாக்கி உள்ளது. மறைந்த கவர்னர் இல.கணேசன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் முழுநேர ஊழியராக இருந்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் ‘விடிந்த கரை’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது. தன் விதியை தானே மாற்றியமைத்த பரிபாடா கிராமம் என்ற உண்மைக் கதை வியக்க வைக்கிறது. களவு போன கனாக் காலங்கள் கவிதை பாரம்பரியத்தை பறைசாற்றுகிறது.



