சென்னை ராயப்பேட்டையில், கிறிஸ்தவ மதவிழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், தி.மு.க, கடந்த தேர்தலில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வழங்கியது. அதில், 200க்கும் மேற்பட்டவை நிறைவேற்றப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். ஆனால், இது உண்மையா?
நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என தெரிந்திருந்தும், ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று பொய்யாக வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்த தி.மு.க அரசின் முதல்வர், தன் முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரணப் பணம் என்ற கோப்பில்தானே கையெழுத்திட்டார்? இது தி.மு.க மக்களுக்கு செய்த துரோகம்தானே? அன்று ஆரம்பித்த துரோகம் இன்றுவரை தொடர்கிறது.
இவர்கள் நிறைவேற்றியதாகக் கூறும் திட்டங்கள் பலவும் பெயர் மாற்றப்பட்ட மத்திய அரசு திட்டங்களும், முந்தைய அ.தி.மு.க அரசின் திட்டங்களும்தான். இவர்கள் செய்தது எல்லாம், அத்திட்டங்களுக்கு தி.மு.கவின் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைதான். மத்திய அரசு கொடுக்கும் இலவச கொரோனா தடுப்பூசி, இலவச ரேஷன் பொருட்கள் போன்றவற்றை தாங்களே வழங்குவதாக மாயத்தோற்றத்தை உருவாக்குவது, மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம் போன்றவற்றில் தி.மு.கவின் ஸ்டிக்கரை ஒட்டுவது என, வெற்று விளம்பரம் செய்து பேர் வாங்கும் பணியைதான் இவர்கள் செய்து வருகின்றனர்.
கோயிலில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், கோயில் பணத்தில் அன்னதானம் அதில் முதல்வர் படம் போட்டு விளம்பரம், கோயில் நகை உருக்குவது போன்ற ஹிந்துக்களை வஞ்சிக்கும் திட்டங்களை செயல்படுத்துவதில், தி.மு.க அரசு உண்மையிலேயே அக்கறை காட்டுகிறது. இதைத்தவிர அவர்களாக நிறைவேற்றியது எல்லாம் சில சாதாரண திட்டங்கள் மட்டுமே. பல திட்டங்கள் வெறும் அறிவிப்புகளாகவே உள்ளன. அது செயல்படுத்தப்பட்டால்தான் அதன் உண்மைத் தன்மைத் தெரியும்.
பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, நகைக்கடன் ரத்து, பெண்களுக்கு இலவச பயணம் போன்ற சில வாக்குறுதிகள் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. கல்விக்கடன் ரத்து, விவசாயக் கடன் ரத்து, பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை போன்ற பல அறிவிப்புகள் இன்னமும் அறிவிப்புகளாகவே உள்ளன. அரசு செலவில் கருணாநிதிக்கு நினைவிடம், திராவிட கம்யூனிச சித்தாந்திகளுக்கு விருதுகள், 700 குற்றவாளிகள் விடுதலை போன்றவற்றை அறிவிப்புகளால் மக்களுக்கு என்ன பயன்? கடைசியாக, ஹிந்துக்களுக்கு இலவச மொட்டை போன்ற ஒருசில புதிய புரட்சிகர திட்டங்களும் தி.மு.கவின் அறிவிப்பில் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.