40 பேர் ஊடுருவல்? தென் மாநிலங்களைத் தாக்க மிகப்பெரிய சதித் திட்டம்

டில்லியில் கைதான, பயங்கரவாதி காஜா மொய்தீனின் ரகசிய இயக்கத்தைச் சேர்ந்த, 40 பேர், ஆயுதங்களுடன் மாயமாகி விட்டதால், அவர்கள் மிகப்பெரிய சதித் திட்டத்தை, நிறைவேற்றும் அபாயம் இருப்பதாக, உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும், மும்பையிலிருந்து பஸ்சில் வந்த, துப்பாக்கி, ‘பார்சல்’கள் மாயமானது எப்படி; அவை எங்கு பதுக்கி வைக்கப்பட்டு உள்ளன என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். அதே நேரத்தில், பயங்கரவாதிகளின் சதித் திட்டம் எதுவும், தமிழகத்தில் நிறைவேறாமல் தடுக்க வேண்டிய, முழுவீச்சில் களமிறங்க வேண்டிய கட்டாயத்தில், தமிழக காவல் துறை உள்ளது.

தமிழக – கேரள எல்லை யான, கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில், இம்மாதம், 8ம் தேதி, பணியில் இருந்த சிறப்பு சப்- – இன்ஸ்பெக்டர் வில்சன், துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொடூரமாக கொல்லப்பட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக, நாகர்கோவில், இளங்கடையைச் சேர்ந்த தவுபீக், 27, திருவிதாங்கோட்டைச் சேர்ந்த அப்துல் ஷமீம், 29, ஆகியோரை, கர்நாடக மாநிலம், உடுப்பியில், 14ம் தேதி, அம்மாநில போலீசார் கைது செய்து, தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் இருவரையும் பின்னால் இருந்து இயக்கிய, பயங்கரவாத வழக்குகளில் தேடப்பட்ட நபர்களான, காஜா மொய்தீன், டில்லியிலும், மெகபூப் பாஷா, பெங்களூரிலும் கைது செய்யப்பட்டனர். இந்த இருவரது பின்னணியும், தமிழக நலனுக்கு பெரும் சவாலானவை என, விவரிக்கின்றனர் போலீசார்.

சென்னை, அம்பத்துாரைச் சேர்ந்த ஹிந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில், காஜா மொய்தீன், சையது அலி நவாஸ், அப்துல் ஷமீம் ஆகியோரை, போலீசார் தேடி வந்தனர். மூவரும், தென் மாநிலங்களில் பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டு, அதற்கான ரகசிய இயக்க கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.

அது மட்டுமின்றி, வெளிநாட்டினர் மற்றும் ஆதரவு தொழிலதிபர்களிடம் பெரும் அளவில் நிதி திரட்டி, தமிழகத்தில் தங்களுக்கென தனியாக பல ஏக்கர் நிலம் வாங்கி, தனி வளாகமாக, ‘கம்யூன்’ அமைப்பதும், அங்கு, தங்களை ஆதரிக்கும் மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து குடியமர்த்துவதும், இவர்களின் திட்டமாக இருந்தது.

இந்த வளாகத்தில் குடியேறும் மக்களிடம், ‘உங்களது எந்த கோரிக்கைக்காகவும் அரசிடம் முறையிடக் கூடாது; பிரச்னை ஏற்பட்டால், போலீசில் புகார் அளிக்கக் கூடாது; எந்த பிரச்னை ஆனாலும், எங்களிடம் தான் முறையிட வேண்டும்’ என, உத்தரவிட முடிவு செய்தனர்.மேலும் தனி சட்டத்துடன் ஒரு, ‘குட்டி சாம்ராஜ்யத்தையும்’ நிறுவ, இவர்கள் திட்டமிட்டு இருந்ததாக, உளவுத் துறையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.

அலட்சியம்

‘இதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது’ என, ஆரம்பத்தில் சற்று அலட்சியமாக இருந்த, தமிழக உளவு போலீசார், காஜா மொய்தீனின் திரைமறைவு திட்டங்களை அறிந்ததும், உஷாரடைந்து தீவிரமாகத் தேடத் துவங்கினர். ஆனால், அதற்குள்ளாக தன் ரகசிய இயக்கத்தில், 40 பேரை சேர்த்து விட்டார் காஜா மொய்தீன்.

கடந்த டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில், ‘மொபைல் போன்களை, ‘சுவிட்ச் ஆப்’ செய்து விட்டு, அனைவரும் சேலம் வந்து விடுங்கள்; குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிக்க வேண்டாம்’ எனக்கூற, அதன்படியே, 40பேரும், மொபைல் போன்களை, ‘சுவிட்ச் ஆப்’ செய்து, மாயமாகினர்.அதுவரை, காஜா மொய்தீனின் தகவல் தொடர்புகளை, ரகசியமாக கண்காணித்து வந்த போலீசார், போன், ‘சுவிட்ச் ஆப்’ ஆனதால் திடுக்கிட்டனர்.

அது போலவே, அவருடன் தொடர்பில் இருந்த சந்தேக நபர்களின் போன்களும், ‘ஆப்’ ஆகியிருந்தன. தமிழகம், கேரளா அல்லது கர்நாடகாவில் பெரிய அளவில் சதித்திட்டம் நடக்கப் போகிறது என, யூகித்த தமிழக போலீசார், மூன்று மாநில போலீசாரையும் உஷார் படுத்தினர்; மத்திய உளவு அமைப்புகளும் உஷார்படுத்தப்பட்டன.

துப்பாக்கி பார்சல்

ஒருபுறம் போலீசார் தேடிக் கொண்டிருக்க, மறுபுறம், காஜா மொய்தீன் தலைமையிலான கும்பல், ஆயுத கடத்தல் மற்றும் தாக்குதல் யுக்திகள் குறித்த வேலைகளில், தீவிரமாக ஈடுபட்டிருந்தது. மும்பையில் இருந்து, தனியார் பஸ்சில் துப்பாக்கி, ‘பார்சல்’கள், மூன்று முறை ரகசியமாக பெங்களூருக்கு வந்து சேர, அவற்றை, மெகபூப் பாஷா என்பவர் சேகரித்து, காஜா மொய்தீன் ஆதரவாளர்களிடம் ஒப்படைத்து, பதுக்கி வைத்தார்.

எந்த மாதிரியான துப்பாக்கிகள், வெடி மருந்துகள் இருந்தன என, யாருக்கும் தெரியாது. இந்நிலையில் தான், மெகபூப் பாஷாவின் மீது, பெங்களூரு போலீசின் கவனம் திரும்பி, கண்காணிக்கத் துவங்கினர். விஷயமறிந்து உஷாரான காஜா மொய்தீன், தன் ஆதரவாளர்கள் மூவருடன் ரயிலில் தப்பி, குஜராத் சென்று பதுங்கினார். அங்கு எதற்காக சென்றனர், என்ன சதித்திட்டம் இருந்தது என்பதும் மர்மமே!

இதற்கிடையில், ஒரு வழியாக, மெகபூப் பாஷாவை கைது செய்த பெங்களூரு போலீசார், ஆயுதங்கள் சிலவற்றை பறிமுதல் செய்தனர். குஜராத்திலிருந்த காஜா மொய்தீன் கும்பல் உஷாராகி, அங்கிருந்தும் மாயமானது. இக்கும்பலின் திட்டமே, பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., உதவியுடன் ஆயுதப் பயிற்சி, தாக்குதல் பயிற்சி யுத்திகளை கற்றறிந்து, நாடு திரும்பிய பின், தென்மாநிலங்களில் தாக்குதல் நடத்துவது தான்.

காஜா மொய்தீன் கும்பலின் சதித்திட்டத்தை ஓரளவு கண்டுபிடித்ததும், உஷாரடைந்த மத்திய உள்துறை, தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, பீஹார், குஜராத், டில்லி போலீசாரை, ‘அலர்ட்’ செய்தது. குஜராத் வங்கதேச எல்லை வரை சல்லடை போட்டு தேடிய போலீசார், பல நாள் வேட்டைக்குப் பின், டில்லியில் பதுங்கியிருந்த காஜா மொய்தீன் உள்ளிட்ட மூவரை, துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

போலீசை மிரட்ட கொலை

காஜா மொய்தீன் கைது செய்யப்பட்டதும், தங்களது சதித்திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டதே என்ற ஆத்திரத்தில் தான், கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில், பணியில் இருந்த சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் வில்சனை, துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும், காஜா மொய்தீனின் ரகசிய இயக்கத்தைச் சேர்ந்த தவுபீக், அப்துல் ஷமீம் ஆகியோர், கொடூரமாக கொலை செய்தனர். ‘எங்கள் ஆட்கள் மீது கை வைத்தால் இது தான் கதி’ என, போலீசை மிரட்டவே இக்கொலையை நிகழ்த்தினர்.

இவ்விருவர் மட்டுமின்றி, கொலை திட்டத்தின் பின்னணியில் இருந்த, 10க்கும் மேற்பட்ட நபர்களை, போலீசார் கைது செய்ததுடன், மேலும் பலரை தேடி வருகின்றனர். எனினும், காஜா மொய்தீனின் ரகசிய இயக்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்த, 40 பேர் எங்கே, மும்பையில் இருந்து பெங்களூருக்கு பஸ்சில் கடத்தி வரப்பட்ட துப்பாக்கிகள், இந்த கும்பலிடம் தான் உள்ளதா, பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டு உள்ளனரா என்ற சந்தேகம், போலீசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்தே, தென்மாநில அரசுகளை, மத்திய உள்துறை அமைச்சகமும், உளவுத் துறையும் அடுத்தடுத்து உஷார்படுத்தியுள்ளன. வில்சன் கொலை வழக்கு, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டால், மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் அம்பலமாகும் என்கின்றனர், போலீஸ் அதிகாரிகள்.