300 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ தயார் – உளவுத்துறை எச்சரிக்கை

 பாகிஸ்தான் ராணுவ உளவுத்துறையிடம் பயிற்சி பெற்ற 300 பயங்கரவாதிகள், இந்தியாவிற்குள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்தியாவிற்குள் ஊடுருவ சரியான நேரம் பார்த்து, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும் உளவுத்துறையினர் தெரிவித்துள்ளது. பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. துணையோடு இந்த பயங்கரவாதிகள் இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அவர்களுக்கு ஆப்கன் தாலிபன்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்கு பயிற்சி அளித்ததுடன், இவர்களின் யெல்பாடுகளையும் பாக்., ராணுவம் கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த பயங்கரவாதிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த குறிவைத்திருப்பதாக தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து கேட்ட இந்திய ராணுவ உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர். பனிக்காலம் என்பதால் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் கோடையில் பனி உருகத் தொடங்கும் போது இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக்கலாம் என ராணுவத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 50 பயங்கரவாத பயிற்சி முகாம்கள் செயல்பட்டு வருவதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.