25 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த மின்சாரம்

சோழவந்தான் அருகே அய்யங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது நகரி கிராமம். இந்த கிராமம் திண்டுக்கல்- மதுரை நான்கு வழி சாலையில் கிழக்குப் புறத்தில் மெயின் ரோடு அருகே அமைந்துள்ளது. இங்கு சுமார் 30 ஆதிதிராவிடர் குடும்பங்கள் 50 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாமல் மின்வாரியத்தில் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தும் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தும் வந்தனர்.

மின்சாரம் இல்லாமல் இங்கு வசிக்கும் முதியவர்கள், பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகள் இரவில் மெழுகுவர்த்தி, தீபம் ஏற்றி அந்த வெளிச்சத்திலேயே வசித்து வந்தனர். தமிழக அரசு விலையில்லா மின்விசிறி, கிரைண்டர், மிக்சி, டி.வி. போன்ற மின்சாரத்தால் இயங்கும் பொருட்களை இந்த கிராம மக்களுக்கு வழங்கி உள்ளது. ஆனால் மின்சார வசதி மட்டும் இல்லை. பல்வேறு அதிகாரிகளை சந்தித்து முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மனவேதனை அடைந்த கிராமமக்கள் புலம்பி வந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் இப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு அரிக்கேன் விளக்குடன் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து மாவட்ட கலெக்டர் ராஜசேகர் உத்தரவின் பேரில் மின் வாரிய உயர் அதிகாரிகள் உரிய ஆலோசனை வழங்கி இப்பகுதிக்கு அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் திருவிழாவாக கொண்டாடினார்கள். அவர்களுடைய குலதெய்வத்துக்கு சிறப்பு அபிஷேகம், பொங்கல் வைத்து பூஜைகள் செய்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். இதில் தங்களுக்கு மின் இணைப்பு கிடைக்க பல வகையில் முயற்சித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

தங்களது வீடுகளுக்கு மின் வசதி கிடைத்ததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் வைத்திருந்த தொலைக்காட்சிப் பெட்டி மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகிய பொருட்களை தூசிதட்டி பயன்படுத்தினர். அப்பொழுது அவர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் இருந்தது நெஞ்சை நெகிழ வைத்தது. ஒவ்வொரு மக்களும் ஏதோ புது வாழ்விற்கு வந்தது போல் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *