17/08/2020 இன்றைய விஜயபாரதம் மின்னிதழ்

அநியாயம் அக்கிரமம் 

இன்றைய சூழ்நிலையில் கோயில் திருவிழாக்கள், பண்டிகைகள் கொண்டாடுவதை தடை செய்திருப்பது பற்றி யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். மாறாக, ஹிந்துக்களுக்கு ஒரு சட்டம், முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு ஒரு சட்டம் என இருப்பதுதான் கண்டிக்கத்தக்கது.
சங்கரன் கோயில் ஆடித்தபசு, ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆடிப்பூரம், மதுரை சித்திரைத் திருவிழா, திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் திருவிழா என கோயில் திருவிழாக்கள் தடை செய்யப்பட்டன. ஆனால், தூத்துக்குடியில் பனிமயமாதா திருவிழாவுக்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதுபற்றி பிஷப் நடத்திய பத்திரிகை நிருபர்கள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளரும், மாவட்ட காவல்துறை அதிகாரியும் கலந்து கொண்டனர். சமீபத்தில் பல ஊர்களில் கூட்டம் கூட்டமாக பக்ரீத் பண்டிகைகளில் கலந்துகொண்ட காட்சிகள்  பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் ஹிந்து முன்னணி உட்பட ஹிந்து அமைப்புகள் அரசு சொல்கிற அவ்வளவு நிபந்தனைகளையும் ஏற்று விநாயகர் சதுர்த்தி நடத்துகிறோம் என்று  உத்திரவாதம் கொடுத்த பிறகும் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாக்களை தடை செய்திருப்பது அநியாயம், அக்கிரமம்.

ஹிந்து முன்னணி ராம.கோபாலன் அறிக்கை:விநாயகர் சதுர்த்தி விழா இந்த ஆண்டு கண்டிப்பாக நடந்தே தீரும். அதனால் என்ன விளைவு வந்தாலும் அதை சந்திக்க ஹிந்துக்கள் தயாராக இருக்கிறார்கள். அதனால் விநாயகர் சதுர்த்தி விழாவை எந்தக் காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க முடியாது, விட்டுக் கொடுக்க மாட்டோம்.

பழச்சாறு பத்வா
கேரளா குர்-ஆன் ஆய்வு மையத்தில் ரெஹமத்துல்லா எனும் மௌல்வி உரையாற்றினார். அதில் நாங்கள் எதை உட்கொண்டாலும் அதை மெல்ல வேண்டும். தண்ணீரையும் மெல்ல வேண்டும். யூதர்கள் நம் எதிரிகள். அவர்களால் பழச்சாறு கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முன் பழச்சாறு என்பதே உலகில் இல்லை. பழச்சாற்றை மெல்ல தேவை இல்லை. எனவே முஸ்லிம்கள் பழச்சாறை இனி குடிக்கக்கூடாது என்றார். விஷம் தோய்ந்த இவரது பேச்சு தற்போது சமூக உடகங்களில் பரவி சிரிப்பை வரவழைத்துள்ளது.
ஸ்டாலினுக்கு மறந்து போச்சா 
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்திருக்கிறார். சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றினால் கொடி வணக்கம் செய்வது தமிழ் தாய் வாழ்த்து பாடுவது தேசியகீதம் பாடுவது என்பது மரபு.ஆனால் இந்த மரபுகள் எதுவுமே கடைப்பிடிக்காமல் தேசிய கொடி ஏற்றிய உடன் “திமுக கட்சி கொடி ஏற்றிய நினைப்பில்” எந்த மரியாதையும் தேசியக்கொடிக்கு செய்யாமல், ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் செல்வது கடும் கண்டனத்திற்கு உரியது.
சங்கராச்சாரியார் தமிழ் தாய் வாழ்த்து பாடவில்லை என்று கொந்தளித்தவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
வீண்பேச்சி வினையாகுது
அண்மையில் திராவிட கழக வீரமணி “யாரும் வந்து நுழைய தமிழ்நாடு என்ன திறந்த வீடா? தமிழ் நாடு வந்தேறிகளின் வேட்டைக்காடு ஆகிவிட்டது; மாநில சுயாட்சியை மீட்போம்.” என கூறியுள்ளார். இவரது கருத்து தேச ஒற்றுமை மற்றும் பாதுகாப்பிற்கு எதிராக உள்ளது. பிரிவினைவாதமும் வன்மமும் நிறைந்த கருத்துகள் இவை. என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தப் போக்கை அந்தந்த மாநிலத்தில் உள்ள சிறுசிறு அமைப்புகள் கையில் எடுத்தால் பெங்களூர், மும்பை, டெல்லியில் உள்ள தமிழர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகாதா? தமிழக அரசு வீரமணியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக’வின் எச். ராஜாவும் கோரிக்கை வைத்துள்ளார்.
கண்ணாடியும் சீப்பும் 
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் வங்கப் பிரிவினைக்குக் காரணமாக இருந்த சர் கர்சன் வில்லி என்ற ஆங்கிலேய அதிகாரியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று வீர சாவர்க்கரும் வவேசு ஐயரும் தீர்மானித்தார்கள். அதற்காக அவர்கள் 22 வயதான மதன்லால் திங்க்ரா எனும் இளைஞனை தேர்ந்தெடுத்தார்கள். அவனும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டான். ஆனாலும் கூட அவனது மன உறுதியை பரிசோதித்துப் பார்க்க முடிவெடுத்தனர். வவேசு ஐயர் ஒரு ஊசியை எடுத்து திங்க்ராவின் நகக் கண்ணில் குத்தினார். ரத்தம் பீறிட்டு வந்தது. ஆனால் திங்க்ராவின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவ்வளவுதான் சோதனை முடிந்தது. கார்யத்தைச் செயல்படுத்த மதன்லாலிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. லண்டனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சர் கர்சன் வில்லியை முன் வரிசையில் உட்கார்ந்திருந்த மதன்லால் திங்க்ரா மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துச் சுட்டுக் கொன்றான். கைது செய்யப்பட்ட மதன்லால் திங்க்ராவிற்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. வீர சாவர்க்கரும் வவேசு ஐயரும் சிறையில் மதன்லாலைச் சந்தித்தபோது, “மதன்லால்… உனக்கு ஏதாவது தேவையா?” என்று கேட்டனர். மதன்லால் திங்க்ரா புன்னகை மாறாமல் சொன்ன பதில்: “எனக்கு ஒரு கண்ணாடியும் சீப்பும் கொண்டுவந்து தாருங்கள், நான் தூக்கு மேடைக்குப் போகும்போது சரியாக உடை உடுத்தியிருக்கிறேனா? சரியாக தலை வாரியிருக்கிறேனா என்று பார்க்க வேண்டும்” என்றான் மதன்லால்.
இன்று மதன்லால் திங்க்ரா நினைவு தினம்.