பாரத நாட்டின் பண்பாடு, கலாச்சாரத்தை மீட்டெடுப்பதில் பெண்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. அதற்கான வாய்ப்பையும், வழிவகைகளையும் ஆண்கள் உருவாக்கித் தர வேண்டும் என்று மாதா அமிர்தானந்தமயி கேட்டுக்கொண்டார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் 11-வது இந்து ஆன்மிக, சேவைக் கண்காட்சி நேற்று தொடங்கியது. தொடக்க விழாவில் ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி கலந்துகொண்டு, பிரம்மாண்டமான ஆன்மிகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
மேலைநாட்டு நாகரிகம்
பெண்மையைப் போற்றும் வகையில் நடைபெறும் இக்கண்காட்சியைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 1,000 ஆண்டுகள் அந்நிய நாட்டு படையெடுப்பால் உடல், உள்ளம், பண்பாட்டு ரீதியாக பலம் இழந்தோம். தனித்தன்மையையும் இழந்தோம். குடும்ப உறவு, குடும்பச் சூழல் மாறியது. முன்பெல்லாம் தாயை தெய்வமாக எண்ணினார்கள். மேலைநாட்டு நாகரிகத்தால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
பெண்களை உடலாகவும், சதைப் பிண்டமாகவும் பார்ப்பதுடன், மரியாதை இல்லாமல் நடத்துவது முக்கியப் பிரச்சினையாக உள்ளது. தாய்மையின் பெருமையை மறந்ததே இந்த நிலைக்குக் காரணம். பெண் என்றால் சபலம் உடையவர், அபலை, வீரம் இல்லாதவர், புகலிடம் இல்லாதவர்கள் என்கின்றனர். ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு இயற்கையாகவே திறன் உண்டு.
பெண்களுக்கு வல்லமை
தாய்மை, பொறுமை, தற்காப்பு, சகிப்புத்தன்மை ஆகியவை பெண்களிடம் இயல்பாகவே உள்ள குணங்கள். அவர்கள் தானாகவே ஒளிவிடும் சூரியன் போன்றவர்கள். சிங்கத்தைப் போல கர்ஜிக்கும் பலமும், வீரமும் பெண்களுக்கு உண்டு. பெண்களின் கருணை, தாய்மை விலை மதிப்பற்றது. மாற்றத்தை ஏற்படுத்தும் மாபெரும் வல்லமை அவர்களுக்கு உள்ளது.
சில ஆண்களின் தீய நடத்தைகளால் மற்றவர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. இந்த சூழலில் அரசியல், சமூக, பொருளாதாரப் பொறுப்புகளில் பெண்களின் பங்களிப்பு ஆறுதல் அளிக்கிறது. பெண்களுக்கு வாய்ப்பும், சுதந்திரமும் அளித்தால் எல்லா தடைகளையும் தாண்டி சாதனை படைப்பார்கள். பாரத நாட்டின் பண்பாட்டை, கலாச் சாரத்தை மீட்டெடுப்பதில் பெண் களுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது. அதற்கான வாய்ப்பு வசதிகளை ஆண்கள் ஏற்படுத்தித் தர வேண்டும்.
முன்மாதிரி பெற்றோர்
மரபணுக்களே ஒருவரது பழக்க, வழக்கங்களுக்கு காரணம் என்கின்றனர். வாழும் சூழலும், ஆன்மிகச் சூழலும் நற்பண்புகளை வளர்க்கும். நல்ல சூழலை குழந்தைகளுக்கு உருவாக்கிக் கொடுத் தால் கலாச்சாரம் வளரும். இதற்கு பெற்றோர் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
முதலில் தாய்மையைப் பேணிக் காக்க பெண்கள் முன்வர வேண்டும். நற்பண்புகளை சிறுவயதில் இருந்தே பெற்றோர் ஊட்ட வேண்டும். அவ்வாறு வளர்த்தால், தவறு செய்யும் சூழல் ஏற்பட்டால்கூட ஆழ்மனதில் இருக்கும் நற்பண்புகள் தவறு செய்வதில் இருந்து தடுத்துவிடும். பள்ளி, கல்லூரி, சமூகம் பாதிப்பு ஏற்படுத்தினாலும் தாய் வழியே கிடைக்கும் நற்பண்புகள் எந்தச் சூழலை யும் எதிர்கொள்ளும் ஆற்றலை அந்த பிள்ளைகளுக்கு கொடுக்கும்.
செய்யும் வேலை, தொழில் காரணமாக மாற்றம் ஏற்படலாம். ஆனால், பெண்கள் எந்த சூழ்நிலையிலும் இயல்பை கைவிடக்கூடாது. அவ்வாறு இருந்தால் பெண்களுக்கு பெருமை இயற்கையாகவே கிடைக்கும். நாடு வளர்ந்து, விரிவடைய வேண்டுமானால் ஆன்மிகமும், உலகியல் வாழ்வும் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
4-ம் தேதி வரை கண்காட்சி
தொடக்க விழாவில், கண்காட்சி அமைப்புக் குழு தலைவர் பத்மா சுப்பிரமணியம், துணைத் தலைவர் ஆர்.ராஜலட்சுமி ஆகியோர் ஆன்மிகக் கண்காட்சி குறித்து பேசினர். முன்னதாக கண்காட்சி வரவேற்புக் குழுத் தலைவர் தங்கம் மேகநாதன் வரவேற்றார். நிறைவில், வரவேற்புக் குழு செயலாளர் ஷீலா ராஜேந்திரா நன்றி கூறினார்.
ஆன்மிகத்தையும், பெண்களின் பெருமையையும் போற்றும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இக்கண்காட்சி வரும் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்.