இந்திய பிரிவினையின்போது ஹைதராபாத் நிஜாம் இந்தியாவுடன் சேர விருப்பமின்றி இருந்தார். அப்போது தங்களிடம் இருந்த 1 மில்லியன் பவுண்டுகளை பாதுகாப்பதற்காக இங்கிலாந்தில் உள்ள பாகிஸ்தான் தூதர் ஷபிப் இப்ராஹிம் ரஹமதுல்லாவின் வங்கிக் கணக்கில் ஹைதராபாத் நிஜாம் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த மொயின் நவாஸ் ஜங் செலுத்தினார்.
அந்தப் பணம் இப்போது 35 மில்லியன் பவுண்டுகளாக (இந்திய மதிப்பில் ரூ.350 கோடி) சேர்ந்துள்ளது. ஹைதராபாத் இந்தியாவுடன் சேர்ந்த நிலையில், அந்தப் பணத்தை இந்தியா உரிமை கோரியது. தங்களுக்கே சொந்தம் என்று பாகிஸ்தானும் உரிமை கோரியது. இந்திய அரசுடன் நிஜாமின் வாரிசுகளும் வழக்கில் சேர்ந்து கொண்டனர்.
சுமார் 70 ஆண்டுகளாக லண்டன் நீதிமன்றத்தில் நடந்தவழக்கில் ரூ.350 கோடி பணம் இந்தியாவுக்கும் நிஜாம் வாரிசுகளுக்கும் சொந்தம் என்று லண்டன் நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், லண்டன் நீதிமன்றம் தீர்ப்பை கடந்த வியாழக்கிழமை உறுதிப்படுத்தி உள்ளது ரூ.350 கோடிபணத்தை நிஜாமின் வாரிசுகளுக்கும் இந்தியாவுக்கும் பாகிஸ்தான் அளிக்க வேண்டும் என்று லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கு செலவில் 65 சதவீதத்தை இந்தியாவுக்கும் நிஜாமின் வாரிசுகளுக்கும் பாகிஸ்தான் கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.