ஹரியாணாவில் பாஜக – ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) கூட்டணி ஆட்சியில் இருந்தது. முதல்வராக பாஜக.வின் மனோகர் லால் கட்டார் பதவி வகித்தார். மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தி அடைந்த ஜேஜேபி கட்சி தலைவரும் துணை முதல்வருமான துஷ்யந்த் சவுதாலா கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றார். இதையடுத்து, முதல்வர் கட்டார், துஷ்யந்த் மற்றும் அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.
பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் உடனடியாக பாஜக எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடத்தினர். அப்போது புதிய முதல்வராக ஓபிசி வகுப்பைச் சேர்ந்த நயாப் சிங் சைனி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா நேற்று முன்தினம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஹரியாணாவில் மொத்தம் உள்ள 90 இடங்களில் பாஜக.வுக்கு 41 இடங்கள் உள்ளன. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை. ஜேஜேபி கட்சி ஆதரவை வாபஸ் பெற்றாலும், பாஜக.வுக்கு சுயேச்சைகள் ஆதரவளிப்பதாக உறுதி அளித்தனர். இந்நிலையில் ஹரியாணா சட்டப்பேரவையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. ஹரியாணா லோகித்கட்சியின் ஒரே ஒரு எம்எல்ஏ கோபால் கண்டா மற்றும் 6 சுயேச்சைகள் ஆதரவுடன் முதல்வர் நயாப் சிங் அரசு வெற்றி பெற்றது. தற்போது ஹரியாணாவில் பாஜக.வின் பலம் 48 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.