ஸ்ரீராம நவமியை ஹிந்துக்கள் கொண்டாடியபோது, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ராம நவமி ஊர்வலங்கள் தாக்கப்பட்டு வன்முறை வெடித்தது. நாட்டின் பல நகரங்களில் கல் வீச்சு மற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வன்முறை சம்பவங்களில் மேற்கு வங்கத்தில் ஒருவரும், மகாராஷ்டிராவில் ஒருவரும் கொல்லப்பட்டனர். இது தவிர, குஜராத், பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ராம நவமி ஷோபா யாத்திரை மீது கற்கள் வீசப்பட்டதாகவும் செய்திகள் வந்துகொண்டுள்ளன. விஜயபாரதம் மின்னிதழின் ஏப்ரல் 1ம் தேதி இதழில், மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற 2 வன்முறை சம்பவங்கள், குஜராத்தி நடைபெற்ற 2 வன்முறை சம்பவங்கள், மேற்கு வங்கம் ஹௌராவில் நடைபெற்ற வன்முறைகள் குறித்த செய்திகள் வெளியாகின. இந்த சூழலில் மேலும் சில மாநிலங்களில் ஹிந்துக்கள் மீது திட்டமிட்ட ரீதியில் நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்த செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் தாக்குதல்: உத்தரப் பிரதேசத்தில், மசூதியின் முன்பாக சாலையில் சென்ற ராம நவமி ஊர்வலத்தின் மீது கல் வீசப்பட்ட சம்பவம் அம்மாநில தலைநகர் லக்னோவின் ஜானகிபுரம் பகுதியில் பதிவாகியுள்ளது. இந்த வன்முறையில் ஒரு வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த கல் வீச்சில் முஸ்லிம் பெண்களும் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர். இந்த ஊர்வலத்தின் ஒருங்கிணைப்பாளரான செயல்பட்ட பா.ஜ.க தலைவர் குல்தீப் சிங் ரத்தோர் இதுகுறித்து பேசுகையில், “இந்த ஊர்வலத்திற்கு அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறப்பட்டு இருந்தது. ஆனால் இந்த வன்முறையால் குழப்பத்திற்கு ஆளானது. சம்பவத்தன்று, ஊர்வலம் சரியாகத் தொடங்கவில்லை, அதிகபட்சம் 50 பேர் கூடியிருந்தனர். அவர்கள் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தனர். ஊர்வலத்தில் கலந்துகொண்ட யாரும், யாருடனும் வாக்குவாதமோ, தகராறோ செய்யவில்லை. ஊர்வலம் ஷாஹி மசூதியின் முன் வந்தவுடன், முதலில், முஸ்லிம் பெண்கள் கூரையிலிருந்து கற்களை வீசத் தொடங்கினர். முஸ்லிம் சிறுவர்களும் சாலையில் சென்ற ஊர்வலத்தை தாக்கினர். பின்னர், ஆண் வன்முறையாளர்களும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர். ஒருபக்கம், முஸ்லிம் வன்முறையாளர்களின் தாக்குதலை சகித்துக்கொண்டு, இந்த ஊர்வலத்தில் சென்ற ஹிந்துக்கள், மறுபுறம் காவல்துறையினரின் கோபத்தையும் சந்திக்க வேண்டியிருந்தது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட 7 பேர், கல் வீச்சுக்காரர்கள் மீது பதில் நடவடிக்கை எடுக்க முயன்றபோது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் கோபமடைந்த மற்ற ஹிந்து பக்தர்கள், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி, காவல்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்” என்றார்.
கர்நாடகாவில் கலவரம்: கர்நாடக மாநிலம் சன்னராயபட்டனாவில், ராம நவமி ஊர்வலத்தில் முஸ்லிம் கலவரக்காரர்கள் நுழைந்து கொடூரமான தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில், 4 ஹிந்துக்களை கூரிய ஆயுதங்களால் தாக்கி, அவர்களைக் கத்தியால் குத்தினர். கல் வீச்சில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சன்னராயபட்டனாவில் ராம நவமி ஊர்வலம் மீது இஸ்லாமிய கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ராம நவமி ஊர்வலம் பஜ்ரங் தள உறுப்பினர்களால் நடத்தப்பட்டது. ஊர்வலம், உள்ளூர் மசூதி அருகே சென்றுகொண்டிருந்தபோது, முஸ்லிம்கள் திட்டமிட்ட வகையில் அதனை தாக்கினர். இரு தரப்பிலும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜார்கண்ட்டில் கல்வீச்சு: ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள ஹல்டிபோகர் பகுதியில் ராம நவமி ஊர்வலம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ஊர்வலத்தில் சென்ற ஹிந்து பக்தர்கள் மீது மர்மநபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், 5 பேர் காயமடைந்தனர். தகவல்களின்படி, ராம நவமி ஊர்வலம் செல்வதை ஒரு மர்ம நபர்கள் குழு எதிர்த்தது. இந்த எதிர்ப்பிற்கு பதிலளிக்கும் வகையில், ஹிந்து பக்தர்கள் ‘ஹனுமான் சாலிசா’ ஓதினார்கள். சிறிது நேரத்தில் அந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள், ஹிந்து பக்தர்கள் மீது கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஜாம்ஷெட்பூர் ஹல்டிபோகர் பகுதியில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டனர்.இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.