வையாவூர், நந்தபேட்டை காத்திருக்கும் பறவைகள்

செங்கல்பட்டு அருகேயுள்ள வேடந் தாங்கலில் உள்ள பறவைகள் சரணாலயம் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. ஆனால் துரதிருஷ்ட வசமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் தொடர்பாக பல மாதங்களுக்கு முன்பு சர்ச்சை ஏற்பட்டது. சுற்றுப்பகுதியை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்ற புகாரின் அடிப்படையில் பொதுநல ஆர்வலர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய அபாயகரமான தொழிற்சாலைகளுக்கு இப்பகுதியில் அனுமதி அளிக்கக்கூடாது என்பதையும் பொதுநல ஆர்வலர்கள் வற்புறுத்தினார்கள்.

மழைக்காலத்தின்போது பல்வேறு நாடுகளைச்சேர்ந்த பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வேடந்தாங்கலுக்கு வருவது வழக்கம். ஏரிகளில் உள்ள நீரை ஆதாரமாகக் கொண்டு அதன் கரையோர மரங்களின் கிளைகளில் பறவைகள் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. குஞ்சுகள் வளர்ந்தவுடன் அவற்றையும் அழைத்துக்கொண்டு தாய்நாடுகளுக்கு பறவைகள் திரும்பிச்சென்றுவிடும். பறவைகள் எவ்வளவு உயரத்தில் கூடுகட்டுகின்றன என்பதை உன்னிப்பாக கவனித்து அதனடிப்படையில் இந்தாண்டு மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் அல்லது குறைவாக இருக்கும் என்பதை வல்லுநர்கள் கணித்துவிடுகின்றனர். அனுபவம் வாய்ந்த விவசாயிகளும் இதை யூகித்து உணர்ந்து கொள்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மழைப்பொழிவு குறைந்ததால் வேடந்தாங்கல் ஏரிக்கு நீர்வரத்து சுருங்கியது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வந்த பறவைகள் அருகே உள்ள நீர்நிலைகளுக்கு படையெடுத்தன. காஞ்சிபுரம் அருகே உள்ள வையாவூர், நத்தப்பேட்டை உள்ளிட்ட ஏரிகளில் அவை தஞ்சம் அடைந்தன. இப்பறவைகள் இங்கேயே தங்கி இனப்பெருக்கம் செய்துள்ளன. அதிகாரப் பூர்வமாக பறவைகள் சரணாலயம் என்று வையாவூர், நத்தப்பேட்டை அறிவிக்கப் படவில்லை என்றபோதிலும் சரணாலயம் போன்ற தோற்றத்தை இப்பகுதி பெற்றுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

வையாவூர், நத்தப்பேட்டை ஏரிகளில் சுமார் பத்தாண்டுகளாக தண்ணீர் ததும்பி நிற்கிறது. ஏரிக்கரையோரங்களில் கருவேல மரங்கள் அடர்ந்துள்ளன. ஏரியைத்தாண்டி மனிதர்கள் யாரும் அப்பகுதிக்குள் செல்ல முடியாதபடி வனம் அடர்த்தியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏரிகளில் உள்ள மீன்கள் பறவைகளுக்கு இரையாக உள்ளன. காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது ராஜகுளம் கிராமம். இதற்கு செல்லும் சாலையின் இடதுபுறத்தில் நூறு ஏக்கர் பரப்பில் வையாவூர் ஏரியும், வலது புறத்தில் ஐநூறு ஏக்கர் நிலப்பரப்பில் நத்தப்பேட்டை ஏரியும் உள்ளன. சில அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வையாவூர், நத்தப்பேட்டையை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் இப்பகுதியைச்சேர்ந்த பொதுநல ஆர்வலர்கள், கிராமவாசிகளின் ஒருமித்த கோரிக்கையாகும். ஏற்கனவே உள்ள பறவைகள் சரணாலயங்கள் தவிர, மேலும் பல பறவைகள் சரணாலயத்தை உருவாக்கி பராமரிப்பது விரும்பத்தக்கது. இதனால் சுற்றுலா மேம்பாடு அடையும். பொது மக்களுக்கு இனிய சுற்றுச்சூழல் சார்ந்த பொழுதுபோக்கு கிடைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பறவைகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேளாண்மை தழைத்தோங்கும்.