விஷ்ராந்தி என்றால் விருட்ஷம்

ஏதோ ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு முறை சமூக சேவகர் சொன்னது இன்னமும் நம் காதில் ஒலிக்கிறது: “உங்கள் அனாதை இல்லத்தை வளர்ப்பது பற்றி உங்கள் கனவு என்ன?” என்ற கேள்விக்கு அவர் சற்று கோபமாகவே சொன்னார்: “எனக்கு அது பற்றியெல்லாம் எந்தக் கனவும்  இல்லை. என்றைக்கு என் ஆஸ்ரமத்தை மூடப்போகிறேன் என்றே நான் சிந்திக்கிறேன். நம் தேசத்தின் கடைசி அனாதை இல்லம் மூடப்படும் நாளே பாரதத்தின் பொன்னாள்” என்றார் அவர்.

அப்படி முதியோர் / அனாதை இல்லங்கள் மூடுகிற நிலை வரும் என்று எவ்வளவு நம்பிக்கையுடன் பார்த்தாலும் கண்ணுக்கெட்டுகிற தூரம் வரை தெரியவில்லை. மாறாக அந்த இல்லங்கள் புதிது புதிதாக முளைக்கத்தான் செய்கின்றன. சென்னை பாலவாக்கத்தில் ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தானமாகக் கொடுத்த ஒரு ஏக்கர் நிலத்தை வைத்து 1978ல் விஷ்ராந்தி ஆதரவற்ற முதியவர்கள் இல்லத்தைத் துவக்கினார் சாவித்திரி வைத்தி. ஹெல்ப் ஏஜ் தனியார் தொண்டு நிறுவனம் கட்டிடம் கட்ட உதவியது. முதியோர் மருத்துவம் பார்க்கும் டாக்டர் நடராஜன் போன்றவர்கள் முதியவர்கள் சுகாதாரத்தை மேற்பார்வையிட்டார்கள். சென்னையில் முதன்முதலாக தொடங்கப்பட்ட முதியோர் இல்லம் இது. விஷ்ராந்தி தொண்டு ஆர்வலர்கள் ரயில் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள் போன்ற இடங்களில் தவிக்கும் முதிய நபர்களை நம்பிக்கை வார்த்தை சொல்லி இல்லத்திற்கு அழைத்து வருவார்கள். சாவித்திரி வைத்தி அம்மா 16 வயதிலேயே சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கினார். மிகச் சாதாரணமாக படிக்கும் ஏழை மாணவர்களுக்குப் புத்தக வங்கி, எளிய மக்கள் பகுதி வாசிகளுக்குக் கல்வி, சுத்தம், சுகாதாரம் போன்றவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று எளிமையாய் ஆரம்பித்த பணிகள் ஆலமரம் போல் தழைத்து வளர ஆரம்பித்தன.  இன்று விஷ்ராந்தி இல்லம்  இந்தியாவில் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது.  விஷ்ராந்தி இல்லம் பற்றி மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள மின்னஞ்சல் vishranthi.trust@yahoo.com அல்லது lekha.shri@gmail.com நூற்றுக்கணக்கான ஆதரவற்ற வயதான பெண்டிருக்கு வாழ்விலும் சாவிலும் மதிப்பையும் மரியாதையையும் இந்த இல்லம் மீட்டுத் தந்திருக்கிறது. ஆதரவும் குடும்பமும் இல்லாதவர்களுக்குக் கடைசி காலத்தில் அந்திமக் காரியங்களும் நடத்திக் கொடுக்கப்படுகின்றன. குடும்பத்தினர் இருந்து இந்த வயதான பெண்டிர் இறந்தால் அவர்கள் குடும்ப சம்மதம் பெறப்பட்டு உறுப்புக்கள் தானமும் செய்யப்படுகிறது. தேவைப்பட்டால் இறந்தவர்களுக்கு எரியூட்டவோ புதைக்கவோ சுடுகாடு செல்லவும் அம்மா தயங்கியதில்லை. ஆரம்பத்தில் இதற்கெல்லாம் நிறைய சமூக, சட்ட சிக்கல்கள் இருந்தன. சாவித்திரி அம்மா எதிர்ப்புகளை எளிதில் வென்று சேவையில் கண்ணாக இருந்ததால் அனைத்தும் சுமுகமாக முடிந்தன. மக்கள் சேவையே மகேசன் பூஜை என்று அம்மா திடமாக நம்பினார். (சுமார் 75 வருட காலம்’ சமூக சேவையே மூச்சாகக் கொண்டு வாழ்ந்த சாவித்திரி வைத்தி அம்மா சமீபத்தில் மறைந்தார்.)