வேளாண் பட்ஜெட் – ஒரு பார்வை

தமிழக சட்டசபையில், முதல்முறையாக வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை, அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். வாழ்த்துகள். ஆனால், எடுத்த எடுப்பிலேயே, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் காணிக்கை’ என அவர் கூறியுள்ளார். இது விவசாயிகளுக்கு மத்திய அரசு செய்து வரும் நன்மைகள், மத்திய அரசின் புதிய விவசாய கொள்கையால் வேளாண் பெருங்குடி மக்கள் அடைந்து வரும் பலன்களை ஒப்புக்கொள்ளாமல் மறைக்கும் முயற்சியாகவே தெரிகிறது.

தி.மு.க ஆட்சியில் அமர்ந்து 100 நாட்களாகியும்கூட இன்னமும் தன்னை ஒரு எதிர்கட்சியாகவே பாவித்து செயல்படுகிறது, பிரிவினைவாத மனப்பான்மை, குறுகிய எண்ணங்கள் எதுவும் மாறவில்லை என்பதையே அவரின் இந்த அறிவிப்பு வெளிப்படுத்தியுள்ளது.

விவசாயிகளின் கருத்துகள் உள்வாங்கி வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது என்கிறார் சரி. ஆனல், உலகளாவிய வேளாண் வல்லுநர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டு உள்ளது என்று சொல்கிறாரே, அப்படி என்ன அறிவித்துள்ளார் என தேடிப் பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை எதுவும் தென்படவில்லை. உதாரணமாக, ‘மழையில் நெல்மூட்டைகள் பாதிக்கப்படுவதை தடுக்க ரூ. 52.02 கோடியில் விவசாயிகளுக்கு ‘தார்ப்பாய்கள்’ வழங்கப்படும்’ என அறிவித்துள்ளார்.

தார்ப்பாய்களை வழங்குவதைவிட, நிரந்தர கொட்டகை, அதில் உயர்த்தப்பட்ட மேடை என கட்டிக் கொடுத்தால் பல வருடங்களுக்கு அது நிலைத்து நிற்குமே, அதை ஏன் செய்ய முயலவில்லை!? இந்த வகையில்தான் அவரது பல அறிவிப்புகளும் உள்ளன. உழவர் சந்தைகளை புனரமைத்து நவீனப்படுத்த ரூ.12.50 கோடி ஒதுக்கீடு என அறிவித்துள்ளார். முன்பு இவர்கள் அமைத்த உழவர் சந்தைகள் என்ன ஆனது, அது எப்படி சீரழிந்தது என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். பெரும்பாலான மொத்த வியாபாரிகள் தி.மு.க விசுவாசிகளே எனும்போது, அவர்களுக்கு லாபம் தராத உழவர் சந்தைகள் வெற்றிகரமாக நடக்குமா என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.

பல திட்டங்களுக்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தில் சூரிய சக்தி பம்பு செட்கள் அமைக்கப்படும் என்கிறார் அமைச்சர். ஆனால், அதில் மாநில அரசின் மானியம் எவ்வளவு, மத்திய அரசின் மானியம் எவ்வளவு என தெரிவிக்கவில்லை. உணவு தன்னிறைவை தமிழகம் ஓரளவிற்கு எட்டிவிட்டது என ஒப்புக்கொண்ட அமைச்சர் அது எந்த ஆட்சி காலத்தில் நடந்தது என்பதை மறைத்துவிட்டார்.

நடப்பு நிதியாண்டில் 4.6 லட்சம் ஏக்கரில் நெல்சாகுபடி செய்யப்பட்டது. இது பெரிய சாதனை என கூறப்பட்டுள்ளது. ஆனால், அதில் முந்தைய அ.தி.மு.க அரசிற்கு பெரிம் பங்கு  உள்ளது என்பது திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது. இல்லையில்லை, இது முழுக்க முழுக்க எங்கள் சாதனைதான் என்று இவர்கள் கூறுவார்களேயானல், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து வீணானதற்கும் இவர்கள்தான் பொறுப்பு என்பதை ஒப்புக்கொள்கிறார்கள் என்றே அர்த்தம்.

கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ. 2,750 ல் இருந்து ரூ. 2,900 ஆக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை ரூ.1,200 கோடி எப்போது விடுவிக்கப்படும். வேளாண் கடனாக ரூ.1.45 லட்சம் கோடி வழங்க விரிவான திட்டம் என மொட்டையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த 8 மாதங்களுக்கா, அல்லது ஐந்து வருடங்களுக்கா, தரப்போவது தமிழக அரசின் பணமா, மத்திய அரசின் நிதியா? இதுவும் வழக்கம்போல தி.மு.க ஸ்டிக்கருடன் தரப்படுகிறதா, இதற்கான நிதி ஆதாரம் என்ன? என்ற எந்த கேள்விக்கும் பதில் இல்லை.

நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வாசித்த தி.மு.க அரசின் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டவற்றில் பெரும்பாலான திட்டங்கள் அனைத்தும் முந்தைய அ.தி.மு.க அரசின் திட்டங்கள், தற்போது நடைபெற்று வரும் மத்திய அரசு திட்டங்கள்தான். அவை பெயர் மாற்றம் பெற்று தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வெளியானதை யாரும் மறுக்க முடியாது. தற்போது வெளியாகியுள்ள வேளாண் பட்ஜெட்டும் அந்த ரகமாகத்தான் தெரிகிறது.

மதிமுகன்