காலங்கள் மாறும், காட்சிகள் மாறும், கள்வர்கள் ராஜ்ஜியம் கடவுளின் முன்பே கசையடிபடும். இது தர்மத்தின் கட்டளை. தமிழ்நாட்டில் இப்போது கள்வர்கள் கசையடி பட ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு ‘‘மைனாரிட்டி கூட்டம்’’ மெஜாரிட்டி மக்களை, மக்கள் நம்பிக்கைகளை பார்த்து குரைத்தது. அதற்குப் பெயர் கருப்பர் கூட்டமாம். அது கருப்பர் கூட்டமல்ல – கள்வர் கூட்டம் – கயவர் கூட்டம் என்பது மக்களுக்கு இப்போது புரியவைக் கப்பட்டிருக்கிறது! கள்வர் கூட்டத்தை பாதுகாத்து வந்தவர்கள் பாடம் கற்றுக்கொள்ள துவங்கி இருக்கின்றனர் என்பதே இந்த நவராத்திரி பூஜைக்குப் பின்னாளே நடக்கும் சந்தோஷமான செய்தி! நான் நேரடியாக ‘‘சப்ஜெட்டுக்கு’’ வந்து விடுகிறேன். இதுவரை அத்தனை ஹிந்து விரோத செயல்களும், ஹிந்து மக்கள் மனதை புண்படுத்தும் பேச்சுக்களும் கடவுளர்களை அவமதிக்கும் நிகழ்வுகளும் செய்து வந்தது திமுகதான். ஆனால் திமுகவுடன் போட்டி போடவேண்டும். அதை பின்னுக்குத் தள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் தவறான பாதையை தோள் கொடுத்து ‘‘ஹிந்துவிரோத மற்றும் தெய்வ நிந்தனையில்’’ இறங்கி இருக்கிறது அதிமுகவும்தான். அதற்கு முதல் உதாரணம், கந்தன் முருகனின் கந்த சஷ்டி கவசத்தை கயவர் கூட்டம் இழிவு செய்தபோது, ஹிந்து இயக்கங்களின் கடுமை யான போராட்டத்திற்கு பிறகே அதிமுக அரசு அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது. அதுமட்டுமல்ல, திமுகவைவிட ‘‘மைனாரிட்டி மக்களை தாஜா செய்வதில்’’ நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என காட்டுவதற்காக, கொரோனாவை காரணம் காட்டி’’ விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளுக்கு முட்டுக்கட்டை’’ போட்டது. விநாயகர் எண்ணிக்கையை அதிமுக அரசு தீர்மானித்தது. ஊர்வலம் செல்ல தடைவிதித்தது. இதே நிலையை 63 நாயன்மார்கள் நிகழ்வுகளிலும் எடுத்தது. இதேபோல ஹிந்துமத கோட்பாடுகளை விவரிக்கும் மனுஸ்மிருதியை தவறாக சித்தரித்து அதில் சொல்லியதற்கு எதிர்மறையான கருத்தை பெண்களை பற்றி சொன்ன எம்.பி திருமாவளவன் மீது வழக்கு தொடர்ந்து கைதுசெய்ய எடப்பாடி அரசு முன்வரவில்லை. ஹிந்துப் பெண்களை ‘‘விபச்சாரிகள்’’ என்று நாகூசாமல் பேசிய திருமாவிற்கு தன்னிலை விளக்கம் அளிக்க ஏராளமான கூட்டங்களுக்கு அனுமதி அளித்ததன் மூலம் மேலும் ஹிந்து பெண்கள் உணர்வை இந்த அரசு புண்படுத்தியது. இப்படி ”ஹிந்து துவேஷம்” பரப்பும் செய்கைகளை திமுகவுடன் போட்டிப் போட்டு கொண்டு கடந்த 6 மாதகாலமாக அதிமுக செய்து வருகிறது.
சென்ற 2018ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளையும் ஜி.ஓ போட்டு விநாயகர் எண்ணிக்கையிலும் ஊர்வலம் செல்பவர்கள் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தியது அதிமுக அரசு. ஆக, திமுகவின் மாறு வேஷமாக அதிமுக செயல்படத்துவங்கி விட்டது. ஆட்சியை பிடிப்பதற்கு என்னவும் செய்யலாம் என்பதோடு ‘மைனாரிட்டி ஓட்டுக்களை’ பெறுவதற்கு ‘மைனாரிட்டி தாஜாவில்’ யார் முனைவர் வாங்குகிறார்கள் என்பது போல அதிமுக முன்னணிக்கு வர முயற்சிக்கிறது.இதன் சமீபத்திய வெளிப்பாடாக, பாஜக நடத்தும் ‘வேல்யாத்திரைக்கு’ தடைவிதித்திருக்கிறது – அனுமதி மறுத்திருக்கிறது. கடந்த 5ம் தேதி யாரோ இரண்டு திமுக, நக்ஸலைட்கள் உயர் நீதிமன்றத்தில் ‘‘வேல்யாத்திரை’’ நடத்தக்கூடாது என வழக்கு தொடர்ந்தனர். இதற்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பு சொல்லும் முன் தன் மைனாரிட்டி விசுவாசத்தைக் காட்ட, அரசே முந்திக்கொண்டு யாத்திரைக்கு அனுமதி மறுப்பதாக அபிடவிட் தாக்கல் செய்தது. இதற்கு காலையில் நீதிமன்றத்தில் சொல்லப்பட்ட காரணம் ‘‘கொரோனா’’ பரவலை தடுக்க என்பதாகும்! மாலையில் முதலமைச்சர் சொன்ன காரணம் 144 உத்தரவு அமலில் இருப்பதால் தடை என்பதாகும்!
இரண்டுமே உண்மைக்கு மாறானது. கொரோனா பரவல் தடுக்க என்றால் தமிழக அமைச்சர்கள் கலந்துகொள்ளும் அத்தனை நிகழ்ச்சிகள், வரவேற்புக்கள், திருமணங்கள் எதிலும் ‘தனிமனித இடைவெளி’ பூஜ்யம்! ஏன் முதலமைச்சரை வரவேற்க கோவை விமான நிலையத்தில் ஆயிரம் பேருக்கு மேல் கூடிய கூட்டத்திலும் இதேநிலைதான். அதிமுக மந்திரி உடுமலை ராதாகிருஷ்ணன் இல்லத் திருமணமும் 50 பேர் கட்டுப்பாட்டை மீறி (அப்போது அப்படி ஒரு உத்தரவு இருந்தது) 5,000 பேர் கலந்துகொண்டதும் முககவசம் அணியாமல் இடைவெளி இல்லாமல் இருந்ததை பார்க்க முடிந்தது. ஆக, வேல்யாத்திரைக்கு அனுமதி மறுக்க சொல்லப்பட்ட போலிக்காரணம் ‘‘சமூகப் பரவல்’’ முதலமைச்சரின் 144 உத்தரவு அமலில் இருப்பதால் என்றால் திருமாவளவனின் 4 ஆர்ப்பாட்டத்திற்கு, அதுவும் ஹிந்து பெண்களை அவமதித்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி அளித்தது ஏன்? அல்லது நடைபெற விட்டது ஏன்? கோவையில் திமுக இளைய பட்டம் உதயநிதி ஸ்டாலின் ஒருமாபெரும் ஆர்பாட்டம் நடத்தினார். அது விலைவாசி உயர்வு போராட்டம் அல்ல – கொரோனா தடுப்பு நிகழ்ச்சி அல்ல – திமுகவினரை பற்றி குறிப்பாக ஸ்டாலின் பற்றி அவதூறாக குறிப்பிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர். அதை கிழிப்பதற்காக ஆயிரக்கணக்கில் அழைத்து வரப்பட்ட கூட்டம். அதற்கு அனுமதி அளித்தது ஏன்? ஆக, மைனாரிட்டி தாஜாவோடு இணைந்து திமுகவை தாஜா செய்யவும் இப்போது அதிமுக துவங்கிவிட்டது வெளிப்படையாகத் தெரிகிறது!
வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பும் குறிப்பாக நீதிமன்றம் உத்தரவு போடுவதற்கு முன்பாக முந்திக்கொண்டு தடைவிதித்தது. திமுக தாஜாவிற்கு நிகரான, ஹிந்து துவேஷ எண்ணத்திற்கு நிகராக ‘‘பாஜக செல்வாக்கு பெற்று வருவதை’’ தடுப்பதற்கான முயற்சி என்பதும் உண்மை! தமிழகம் முழுவதும் ஹிந்து சக்தி ஒன்று திரள ஆரம்பித்திருக்கிறது. தெய்வீக தமிழக சங்கம் என்கிற அமைப்பின் வீடுவீடான பிரச்சாரம், தமிழகம் தழுவிய பாஜகவின் ‘‘வெற்றி வேல்’’ எழுச்சி யாத்திரை கழகங்களை கதிகலங்க வைத்திருக்கிறது.
‘‘சுற்றி நில்லாதே போ பகையே, துள்ளி வருகுது வேல்!’’ என்றான் பாட்டுக்கொரு புலவன். பாஜகவின் வேல் யாத்திரை பகைவர்களையும், பகைக்குள்ளே பதுங்கியிருக்கும் கயவர்களையும், சுற்றி சுற்றி வந்து ‘துவம்சம் செய்ய’ புறப்பட்டுவிட்டது. அரசின் தடைகளையெல்லாம் தகர்த்தெரிந்து திருத்தணியிலே துவங்கிவிட்டது. அயோத்தியை மீட்க அத்வானி ரதயாத்திரை புறப்பட்டது போல காஷ்மீரை மீட்க முரளி மனோகர் ஜோஷி புறப்பட்டது போல இப்போது ஆன்மீகம், தெய்வீகம், இந்துமதம் விரோதிகளை வேரறுக்க “வேல் யாத்திரை” புறப்பட்டுவிட்டது.