வேப்பமர திகில்

இரவு மணி ஒன்பதரை. ஹாரி பாட்டர் புத்தகத்தில் மூழ்கியிருந்த தனது பத்து வயது மகள் மீனாவை கையைப் பிடித்து வெளியே அழைத்துச் சென்றார் ராஜசேகர்.

“நாள் முழுக்க ஆன்லைன் கிளாஸ், மொபைல் கேம், பொது முடக்கம் காரணத்தால் வெளியே போய் விளையாட முடிவதில்லை …’கேட்’டைப் பூட்டுவதற்கு என்னோடு வெளியே வா” என்றார் ராஜசேகர். ஹாரி பாட்டர் உலகத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேறிய மீனா, அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு கீழே இறங்கினாள்.

வீட்டின் வாசற்படியில் இருந்து மெயின் கேட் வரையில் சிறிது தொலைவு நடைபாதை. இருபுறமும் பூச்செடிகள். நடுவே சிமெண்ட் பாதை வாசல் படியில் இருந்து கேட் வரை.

தந்தையும் மகளும் வாசற்படியை கடந்தனர். ராஜசேகர் மீனாவிடம் சொன்னார்: “கொஞ்சம் தலையை நிமிர்ந்து ஆகாசத்தை பார்”.

மீனா தலை நிமிர்ந்தாள். “அப்பா! அந்த சந்திரன் பக்கத்துல ஒண்ணுக்குப் பின்னால ஒண்ணா இரண்டு நட்சத்திரம் இருக்கு” என்றாள். நட்சத்திரங்களை கவனிக்கும் பழக்கம் உள்ள ராஜசேகர் கூறினார்: “ரெண்டும் நட்சத்திரம் இல்லை. கிரகங்கள். அது ரெண்டும் சிமிட்ட
வில்லை பார். ரொம்ப பிரகாசமாக தெரிவது ஜுபிடர் (குரு); கொஞ்சம் மங்கிய ஒளியோடு அதன் பின் இருப்பது ஸாடர்ன் (சனி).” “சூப்பர் அப்பா! ரொம்ப நல்லா  தெரியுது. இதையெல்லாம் நான் புத்தகத்தில் படித்ததோடு சரி. இனிமே நானும் தினம் உன்னோடு இரவு கேட் பூட்ட வரேன். அப்போ நட்சத்திரங்களை பத்தியெல்லம் சொல்லு. ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு” என்றாள் மீனா.

தான் அடுத்த படியாகப் பார்க்கப் போவதை கண்டு அடையப் போகும் திகில் அறியாமல் மீனா இவ்வாறு பேசிக்கொண்டே போனாள்.

 தந்தையும் மகளும் கேட் அருகே சென்று விட்டனர். தெருவிளக்கு மந்தமான ஒளியுடன் எரிந்துகொண்டிருந்தது. தெருவில் நடமாட்டம் இல்லை. இரண்டு தெரு தள்ளி நாய் குரைத்தது. கையில் கொண்டு வந்திருந்த சாவியின் உதவியுடன் கேட்டைப் பூட்ட ஆரம்பித்தார் ராஜசேகர்.

மீனாவின் பார்வை வானத்தில் இருந்து மெல்ல கீழே இறங்கியது. எதிர் வீட்டு வாசலில் இருந்த வேப்ப மரத்தின் மீது சென்றது. அங்கே அவள் கண்டது அவளை ’வீல்’ என்று கத்த வைத்தது. ராஜசேகர் திடுக்கிட்டார்.

“என்னம்மா, என்ன ஆச்சு?” என்று அவர் கேட்பதற்குள் மீனா வீட்டை நோக்கி ஓடினாள். கேட்டை வேகமாகப் பூட்டிவிட்டு ராஜசேகர் மீனாவைத் தொடர்ந்து ஓடினார். மீனா வீட்டுக்குள் வாசற்படியில் இடது ஓரமாக ஒளிந்து கொண்டு திகிலுடன் மெல்ல வெளியே கேட்டையும் எதிர்வீட்டு வேப்ப மரத்தையும் பயத்துடன் பார்க்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

ராஜசேகருக்கு மீனாவின் செய்கை வியப்பளித்தது “என்னம்மா பயத்தோட  எதைபார்த்துகிட்டு இருக்கே?” என்றார் அப்பா. “அந்த வேப்ப மரத்தில் வெள்ளையா ஒரு உருவம் தொங்கிக்கிட்டு இருக்கு. ராஜசேகர் அப்போது தான் கவனித்தார். ஆம், அவர் கண்ணிலும் அது பட்டது. பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாகத்தான் இருந்தது. ஒரு வெள்ளையான உருவம் தொங்கிக் கொண்டிருப்பது போல இருந்தது. இந்த சலசலப்புக்கெல்லாம் சாதாரணமாக அஞ்சாத ராஜசேகரும் சிறிது துணுக்குற்றார்.

“சரி சரி, பயப்படாதே. என்னன்னு நாளைக்கு காலையில பார்ப்போம்” என்று வாசற் கதவை சாத்தி தாளிட்டார் சிறிது சிந்தனையுடன். அப்பா அது பேயாக இருக்குமோ? ஹாரிபாட்டர் புத்தகத்தில காப்ளின்  பத்தி படிச்சிருக்கேன், அதுவாக  இருக்குமோ” என்றாள் மீனா திகிலுடன். சரி, இப்ப அந்த ’அமர் சித்ர கதா’ புத்தகத்தை எடு. நீ, நான், அம்மா மூன்று பேரும் சேர்ந்து ஒரு கதையை படித்து விட்டு தூங்கப் போகலாம்” என்றார் ராஜசேகர் பேச்சை மாற்றும் விதமாக. அமர் சித்ர கதா என்றதும் மீனாவுக்கு பயம் மறைந்து குதூகலம் பிறந்தது. துள்ளிக்கொண்டு புத்தக அலமாரிக்கு அருகில் சென்றாள். வேப்பமரம் பற்றி மீனா மறந்தாள். ராஜசேகர் மறக்கவில்லை. ’அது’ என்ன என்று நாளை காலையில் பார்த்துவிட வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டார்.

வீட்டுச்சுவற்றில் படமாக வீற்றிருந்த பாரதி” அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்று தன் அச்சமிலா மோனத்தில் இருந்துகொண்டு  நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தான்.

அம்மா, அப்பா, மீனா மூவரும் ’சங்கத்தமிழ் அரசன் குமணன்’ பற்றி கதை படித்துவிட்டு (ஆமாம், உண்மையில் அமர்  சித்ர கதாவில் அது பற்றி இருக்கிறது) சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு அயர்ந்து தூங்கிவிட்டார்கள். வேப்பமர வெள்ளை உருவம் மறந்து போனது.

அடுத்த நாள் காலை மணி ஏழு. அம்மா வழக்கம் போல வாசல் பெருக்கி கோலம் போட்டு விட்டு, சமையல் அறையில் இருந்தாள். பொது முடக்கம் என்பதால் வீட்டு வேலைக்கு வரும் சாவித்திரி அம்மாள் வருவது இல்லை. ஆகவே ராஜசேகரும் தனது காலைப் பணிகளை முடித்து விட்டு வீட்டை பெருக்கி கொண்டிருந்தார்.

 “சார் பேப்பர்!” என்று சத்தம் கேட்டு அவர் கவனம் கேட் பக்கம் சென்றது. மீனாவும் அப்போது தான் கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்து வந்து கொண்டிருந்தாள். ராஜசேகர் கேட்டில் சொருகியிருந்த தினசரியை கொண்டு வருவதற்காக  வாசற்படி தாண்டி கேட்டை நோக்கிச் சென்றார். அப்போதுதான் அவருக்கு கடந்த இரவின் வேப்ப மர வெள்ளை உருவம் பற்றி ஞாபகம் வந்தது. எதிர்வீட்டு வேப்பமரத்தை கூர்ந்து கவனித்தார் ராஜசேகர்.

இன்னமும் அந்த வெள்ளை உருவம் தொங்கிக்கொண்டிருந்தது. அதன் பின்புறம் இருந்து ஒரு கரிய பறவை சிறகடித்துச் சென்றது. ஒரு காக்கா தாங்க அது. அது கட்டியிருந்த குறுக்கும் நெடுக்குமான கூட்டிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த பட்டையான பிளாஸ்டிக் ஒயர் இரவில் குறைந்த வெளிச்சத்தில் கைகால்களுடன் இருக்கும் ஒரு உருவம் போல திகிலூட்டிருக்கிறது என்பதைக் கணநேரத்தில் உணர்ந்து சிரித்துக் கொண்டார் ராஜசேகர்.

“மீனுக்குட்டி, இங்கே வா!” என்று மகளை அழைத்து ராத்திரி நேரத்து வேப்பமர வெள்ளை உருவத்தின் ரகசியத்தை விளக்கினார். தந்தையும் மகளும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

“என்ன இங்க ஒரே சிரிப்பு…?” என்று கேட்டுக்கொண்டே அம்மாவும் வாசற்படி அருகே வந்து சேர்ந்தாள். பக்கத்து வீட்டு ரிட்டயர்டு போஸ்ட்மேன் தாத்தா சத்தமாக வைத்திருந்த பழைய பாட்டு காற்றில் மிதந்து வந்தது.

வேப்பமர உச்சியில் நின்னு

பேயொண்ணு ஆடுதுன்னு

விளையாடப் போகும்போது

சொல்லி வைப்பாங்க,

 உன் வீரத்தை கொழுந்திலேயே

கிள்ளி வைப்பாங்க…”