விருதுகளெல்லாம் மகுடங்கள் அல்ல

உலகிலேயே மிகப் பெரிய விருதாக நோபல் பரிசு கருதப்படுகிறது. இன்னும் சில வாரங்களில் நிகழ் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட இருக்கின்றன.

சமாதானத்துக்கான நோபல் பரிசு, மகாத்மாகாந்திஜிக்குக் கொடுக்கப்படவே இல்லை. இதனால் நோபல் பரிசுக்குதான் கௌரவக் குறைச்சலே தவிர, மகாத்மா காந்திக்கு கௌரவம் குறைய வில்லை. இலக்கியத்துக்கான நோபல் பரிசு இதுவரை ஒரே ஒரு பாரதியருக்குத்தான் கிடைத்துள்ளது. அவர் ரவீந்திரநாத் தாகூர்.shivaji

பாரதத்தைச் சேர்ந்த வேறு எந்த இலக்கிய ஆளுமைக்கும் நோபல் பரிசு கிடைக்காதது  தேர்வு செய்யப்படும் நடைமுறையில் உள்ள குறைபாட்டையே சுட்டிக்காட்டுகிறது.

எல்லா பரிசுகளுமே சர்ச்சைகளை கிளப்புகின்றன.

சாகித்திய அகாடமி விருது தொடர்பாகவும் அடிக்கடி காரசார மோதல்கள் நடைபெற்றுள்ளன. தகுதிவாய்ந்த பலருக்கு விருது கிடைக்காமல் போயிருக்கிறது. தகுதியற்ற பலருக்கு விருது கிடைத்துள்ளது. உதாரணமாக, தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க ஆளுமையாகத் திகழ்ந்து, வலுவான சுவடுகளை பதித்துச் சென்ற சுந்தர ராமசாமிக்கு ஞான பீட விருதோ அல்லது சாகித்ய அகாடமி விருதோ அளிக்கப்படவில்லை.

ஆசியாவின் நோபல் பரிசாகக் கருதப்படும் மகசேசே விருதும் சர்ச்சையை எழுப்பிய பொழுதுகளே அதிகம். இசைக் கலை வல்லுனர் டி.எம். கிருஷ்ணாவுக்கும் துப்புரவாளர்களின் நலனுக்காக பாடுபடும் சமூக சேவகர் வில்சனுக்கும்  இந்த ஆண்டு மகசேசே விருது வழங்கப்பட்டதில் உள்நோக்கம் உண்டு என்ற விமர்சனத்தை உதாசீனப்படுத்த முடியாது.

கலைத்துறை சார்ந்த விருதுகள் அதிக கவனத்தைப் பெறுவது இயல்பானதுதான். ஆஸ்கார் விருதுகள் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் குக்கிராமங்களில் உள்ள மக்களிடம் கூட காணப்படுகிறது. நடிகர் கமலஹாசனுக்கு செவாலியே விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன் இதே விருதை நடிகர் சிவாஜி கணேசன் பெற்றுள்ளார்.

சிவாஜி கணேசனுக்கும் கமலஹாசனுக்கும் கலைத்துறை சார்ந்த விருதுகளைப் பெறுகின்ற தகுதி உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் செவாலியே விருது பெற்றதால்தான் சிவாஜி கணேசனுக்கும் கமலஹாசனுக்கும் சிகர பெருமை ஏற்பட்டுள்ளது என்று வரைமுறையின்றி பாராட்டுரைகளை வெளியிடுவது வரவேற்கத்தக்க அம்சம் என்று கூற முடியாது. செவாலியே விருது பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் வெ. ஸ்ரீராம் இரண்டு செவாலியே விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

விருதுகள் மணி மகுடங்களாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, சில வேளைகளில் முள் கிரீடங்களாக உறுத்தும் நிலை ஏற்பட்டுவிடுகிறது.