விண்வெளி பயணத்தில் பாரத வீரர் சுபான்ஷு சுக்லா வெற்றிப் பயணம்

விண்வெளி பயணத்தில் பாரத வீரர்

சுபான்ஷு சுக்லா வெற்றிப் பயணம்

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் பாரதத்தின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தேர்வான வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா, அனுபவப் பயிற்சி நோக்கங்களுக்காக விண்வெளிக்குப் பயணித்துள்ளார்.

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் பாரத வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட நான்கு பேர் கொண்ட குழு, ‘டிராகன்’ விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கிய பயணத்தை புதன்கிழமை நண்பகலில் வெற்றிகரமாகத் தொடங்கியது.

‘ஸ்பேஸ்-எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஃபால்கன்- -9’ ராக்கெட் மூலம் விண்கலம் விண்ணில் செலுத்தப் பட்டது. 28 மணி நேர பயணத்துக்குப் பிறகு டிராகன் விண்கலம் ஜூன் ௨௬ மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது.

கடந்த 1984ல் ரஷிய விண்கலத்தில் பாரத வீரர் ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குப் பயணித்த 41 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் ஓர் பாரத வீரர் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

சுக்லாவுடன் ஆக்ஸியம்-4 திட்டக் குழுவில் திட்ட கமாண்டரான முன்னாள் நாசா விண்வெளி வீரர் பெக்கி விட்சன், போலந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோர் கபு ஆகியோரும் விண்வெளிக்குப் பயணம் செய்துள்ளார்..

கடந்த 22-ஆம் தேதி விண்கலத்தை விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்ட நிலையில், தொழில்நுட்பக் கோளாறால் இந்தப் பயணம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுகிறது என நாசா தெரிவித்தது.

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கன்–9  ராக்கெட் மே 5 புதன்கிழமை பிற்பகல் 12.01 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது. டிராகன் விண்கலம் புவி சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதும், விண்வெளி வீரர்கள் தங்களின் விண்கலத்துக்கு ‘கிரேஸ்’ என்ற புதிய பெயரைச் சூட்டினர். இவர்கள் வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைவர்.

அங்கிருந்து சுமார் 60 சோதனைகளை மேற் கொள்ளும் இவர்கள் 14 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள். இந்தச் சோதனைகளுடன் கூடுதலாக வீரர்கள் தங்கள் பாரம்பரிய உணவுகளையும் விண்வெளிக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.