குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் என்ற பெயரில் வன்முறையும் வெடித்தது. உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடந்த போராட்டத்தில் இதுவரை 17 பேர் இறந்துள்ளனர். இதுதவிர போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் உள்பட ஏராளமானோர் காயம் அடைந்தனர். போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் உள்பட பல வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறையில் ஈடுபட்ட 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 150 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ராம்பூர் மாவட்டத்தில் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் சேதமான சொத்துகளை மதிப்பிடும் பணியில் மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் ஈடுபட்டனர். இதில் முதலில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் சேதமானதாக கணக்கிடப்பட்டது. பின்னர் இறுதியில் இந்த சேத மதிப்பு ரூ.25 லட்சமாக உயர்ந்தது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் வன்முறையில் ஈடுபட்ட 28 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
கலெக்டர் ஆஞ்சநேயா சிங் கூறும்போது, “போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்ட 28 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு அவர்கள் 7 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். பதில் அளிக்க தவறினால் அரசு மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்படுத்திய சேதத்துக்கான தொகை ரூ.25 லட்சத்தை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.