‘சிவசேனா’ வந்த பாதை…
* ஜூன் 19, 1966: அரசியல் கார்ட்டூனிஸ்டாக இருந்த பால் தாக்கரே, சிவசேனா கட்சியை தொடங்கினார். ‘மும்பையில், மராத்தியர்களுக்கு தான் வேலைவாய்ப்பு’ என்ற நோக்கத்தோடு கட்சி தொடங்கப்பட்டது.
* கடந்த, 1968: மும்பையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், 123 இடங்களில், 42ல் வென்று அரசியலில் அடித்தளமிட்டது.
* 1969: கர்நாடகா – மஹாராஷ்டிரா இடையிலான எல்லை பிரச்னையை தீர்க்க கோரி பால்தாக்கரே பந்த்; வன்முறை ஏற்பட்டது; பால்தாக்கரே கைது.
* 1985: சிவசேனா, 75 இடங்களில் வென்று, மும்பை மாநகராட்சியை கைப்பற்றியது.
* 1989: சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., வுடன் கூட்டணி. சிவசேனா கட்சி நாளிதழ், ‘சாம்னா’ துவக்கம்.
* 1990: சட்டசபை தேர்தலில், 52 இடங்களில் வென்றது. சிவசேனாவின் மனோகர் ஜோஷி, எதிர்க்கட்சி தலைவரானார்.
* 1991 அக்.: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வர எதிர்ப்பு தெரிவித்து, மும்பை வான்கடே மைதானத்தை சிவசேனா சேதம். தொடர் கைவிடப்பட்டது.
* 1995: சிவசேனா – பா.ஜ., கூட்டணி முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது. சேனா, 73 இடங்களில் வென்றது. சிவசேனாவின் மனோகர் ஜோஷி முதல்வரானார்.
* 1998: 1992 பாபர் மசூதி இடிப்புக்கு பின், மும்பையில் நடந்த கலவரத்துக்கு சிவசேனா காரணம் என, ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி குற்றம்சாட்டியது.
* 1999: சட்டசபை தேர்தலில், சிவசேனா – பா.ஜ., கூட்டணி தோல்வி.
* 2003: பால்தாக்கரே மகன் உத்தவ் தாக்கரே, கட்சியின் செயல் தலைவரானார்.
* 2012: உள்ளாட்சி தேர்தலில், 75 இடங்களில் வென்று, சிவசேனா மும்பை மாநகராட்சியை கைப்பற்றியது.
* நவ., 17, 2012: பால்தாக்கரே மறைவு.
* ஜன., 23, 2013: உத்தவ் தாக்கரே கட்சி தலைவரானார்.
* 2014: சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டி. 63 இடங்களில் வெற்றி. தேர்தலுக்குப்பின், பா.ஜ., அரசுக்கு ஆதரவு.
* ஏப்., 2019: லோக்சபா தேர்தலில், பா.ஜ., வுடன் கூட்டணி; 18 இடங்களில் வெற்றி.
* அக்.: சட்டசபை தேர்தலில், பா.ஜ., – சிவசேனா கூட்டணி. சேனா, 56 இடங்களில் வென்றது. முதல்வர் பதவி கிடைக்காததால், பா.ஜ., கூட்டணியை முறித்துக் கொண்டது.
அரசியல் எதிரிகளோடு கைகோர்ப்பது சிவசேனாவுக்கு புதிதல்ல. 53 ஆண்டுகள் பழமையான கட்சி ஆரம்பத்தில் காங். பக்கம் இருந்தது. பின் இந்துத்துவா கொள்கை அடிப்படையில் பா.ஜ. உடன் நட்பானது. இப்போது முதல்வர் பதவிக்காக மீண்டும் காங். வசம் தாவியுள்ளது.
ராமர் ‘விசிட்’ ரத்து
கடந்த ஒரு ஆண்டாக அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உறுதியாக இருந்தார். இதற்காக மோடி அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டுமேன கோரிக்கை விடுத்தார். கடந்த நவ.9ல் உச்சநீதீமன்றம் தீர்ப்பு கோயில் கட்ட அனுமதி அளித்தது. இந்த தருணத்தில் மஹாராஷ்டிரா முதல்வர் பதவி தொடர்பாக பா.ஜ.வுடன் மோதல் ஏற்பட உத்தவ் அடக்கி வாசித்தார். காங். உடன் ஏற்பட்டுள்ள புதிய உறவு காரணமாக இந்துத்துவா கொள்கையில் சமரசம் செய்தார். அயோத்தி பயணத்தை ஒத்தி வைத்தார்.
காங்., ‘கைப்பாவை’
மஹாராஷ்டிராவில், 1960 – 70களில் இடது சாரி தொழிற்சங்க வளர்ச்சியை கட்டுப்படுத்த, காங்., சிவசேனாவை பயன்படுத்திக் கொண்டது. 1971ல், லோக்சபா தேர்தலில், காங்., உடன் கூட்டணி வைத்து மும்பை, கொங்கண் பகுதியில், மூன்று தொகுதிகளில் சிவசேனா போட்டியிட்டது. 1975ல், இந்திராவின், ‘எமர்ஜென்சி’க்கு ஆதரவு அளித்தது.
- கடந்த, 1977ல், மேயர் தேர்தலில், காங்., கட்சியின் முரளி தியோராவுக்கு ஆதரவு அளித்தது.
- 1963 – 75 வரை முதல்வராக இருந்த, காங்., கட்சியின் வசந்த ராவ் நாயக்கிற்கு ஆதரவு அளித்தது. இதனால், சிவசேனா, ‘வசந்த சேனா’ என கேலியாக அழைக்கப்பட்டது.
1978ல், சட்டசபை தேர்தலில், ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்க, சிவசேனா முயற்சி செய்தது. இது கைகூடாமல் போகவே, இந்திரா தலைமையிலான, காங்., உடன் சேர்ந்தது. இந்திரா எதிர்ப்பு அலையால், போட்டியிட்ட, 33 இடங்களிலும் தோற்றது. இந்திரா மறைவுக்கு பின், காங்., – சிவசேனா உறவில் விரிசல் ஏற்பட்டது. 1990களில், ஹிந்துத்துவா கொள்கையை தீவிரமாக கையில் எடுத்து, பா.ஜ., பக்கம் சாய்ந்தது. பின் திடீரென, ‘பல்டி’ அடித்து, ஜனாதிபதி தேர்தலில், காங்,, ஆதரவு பெற்ற பிரதிபா பாட்டீல், பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளித்தது. தற்போது, ‘சோனியா சேனா’வாக மாறியுள்ளது.