சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குவதாகவும், பிப்.19-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாகவும் பேரவைத்தலைவர் அப்பாவு அறிவித்தார்.
இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவைக் கூட்டத்தை, ஆளுநர் ஆர்.என்.ரவி, வரும் பிப்.12-ம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள பேரவை அரங்கில் கூட்டிஉள்ளார். அன்றைய தினம், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வரும் பிப்.19-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து பிப்.20-ம் தேதி 2024-25-ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையையும், பிப்.21-ம் தேதி 2023-24-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான இறுதி மானிய கோரிக்கையையும் தாக்கல் செய்கிறார். ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றம் சட்டப்பேரவையையோ, சட்டப்பேரவை தலைவரையோ கட்டுப்படுத்தாது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு என்பது வேறு. ஆனால், சட்டப்பேரவையில் ஒரு உறுப்பினரை எங்கு அமரவைக்க வேண்டும் என்பதற்கான முழு உரிமையும் பேரவைத் தலைவருக்குத்தான் உண்டு. இதை நான் மட்டுமல்ல, முன்னாள் பேரவைத் தலைவர் பி.தனபாலும் சட்டப் பேரவையிலேயே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்வது தொடர்பாக, மறைந்த முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக, சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையாக காட்ட முடியாது என்று தெரிவித்திருந்தது. தற்போது அந்த வழக்கில் அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி தன்னையும் இணைத்துக் கொண்டு முழுமையாக நேரலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றபின், முழுமையாக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையாக காட்ட வேண்டும் என்பதுதான் திட்டமாக உள்ளது. அதை நோக்கிதான் தற்போது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, கேள்வி-பதில்கள் முழுமையாகவும், முக்கிய கவன ஈர்ப்பு மற்றும் அரசு தீர்மானங்களும் காட்டப்பட்டு வருகின்றன. ஆனால், நாட்டில் பல மாநிலங்களில் நம்மைப்போன்று சட்டப்பேரவை நிகழ்வுகளை காட்டுவதில்லை. அடுத்ததாக பேரவையில் நடைபெறும் விவாதத்தையும் முழுமையாக நேரலை செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். அதற்கான பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். நாங்கள் எதையும் மறைக்கவில்லை.
கடந்த 1921-ல் இருந்து இன்று வரை உள்ள சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஆன்லைனில் பார்ப்பதற்காக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்போது சட்டப்பேரவைக்கு உள்ளே நடைபெறுவதையும், வெளிப்படைத்தன்மையுடன் முந்தைய நிகழ்வுகள் தொடர்பான தகவல்களையும் அளிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவின் அதிபராக 6 ஆண்டு காலத்தில் விளாதிமிர் புதின் 1 மில்லியன் டாலருக்கும் குறைவாகவே சம்பாதித்துள்ளதாக தேர்தல் ஆணைய ஆவணங்களை மேற்கோள்காட்டி நியூஸ் வீக் தெரிவித்துள்ளது.
வரும் மார்ச் மாதம் ரஷ்ய அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி தான் சம்பாதித்த சொத்துகள் குறித்தவிவரங்களை ரஷ்ய தேர்தல் ஆணையத்திடம் புதின் தாக்கல் செய்துள்ளார். அதில், ரஷ்ய அதிபராக 2018 முதல் 2024 வரையிலான 6 ஆண்டு காலத்தில் 67.6 மில்லியன் ரூபிள் அதாவது 7,53,000 டாலர் புதினுக்கு வருவாயாக கிடைத்துள்ளது. இதில், வங்கி வைப்புத் தொகை, அவரது ராணுவ ஓய்வூதியம் மற்றும் சொத்து விற்பனையின் வாயிலாககிடைத்த பணமும் அடங்கும்.
இதற்கு நேர்மாறாக, அமெரிக்க அதிபரின் ஓராண்டு வருமானமே 4 லட்சம் டாலராக உள்ளது கவனிக்கத்தக்கது. கடந்த 2000-ம் ஆண்டு முதல்2 தசாப்தங்களாக ரஷ்ய அதிபராக புதின்கோலோச்சி வருகிறார். இந்நிலையில்,வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலிலும் புதின் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் மத்திய தேர்தல் ஆணையம் கூறுகையில், “புதினுக்கு 10 வெவ்வேறு வங்கி கணக்குகளில் 54.5 மில்லியன் ரூபிள் (6,06,000 டாலர்) சேமிப்பு உள்ளது. பழங்கால கார்களும் அவரிடம் உள்ளன.
மேலும், ரஷ்ய அதிபருக்கு மாஸ்கோவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பும், செயின்ட்பீட்டர்ஸ்பர்க்கில் ஒரு அப்பார்ட்மெண்ட் மற்றும் ஒரு கேரேஜும் உள்ளதுஎன தெரிவித்துள்ளது. பின்லாந்தையொட்டிய ரஷ்ய எல்லைக்கு அருகில் புதினுக்கு ரகசிய குடியிருப்பு ஒன்று உள்ளதாக மாஸ்கோ டைம்ஸ் ஆவணங் களை மேற்கோள்காட்டி கூறியுள்ளது. ரஷ்ய அரசியலமைப்பு சட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு சர்ச்சைக்குரிய வகையில் செய்யப்பட்ட திருத்தத்தைத் தொடர்ந்து, 71 வயதான புதின் 2036-ம் ஆண்டு வரை அதிபர் பதவியில் நீடிக்கவழிவகை செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.