பல்வேறு போக்குவரத்துகள் இருந்தாலும் கூட ரயில் போக்குவரத்துக்கு பிரத்யேக இடம் உள்ளது. நடுத்தர வகுப்பினர் சௌகரியமாக தொலைதூரங்களுக்கு பயணிக்க ரயில்களே உறுதுணையாக உள்ளன. ரயில் போக்குவரத்தை விரிவாக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. பாதுகாப்புக்கும் நேரம் தவறாமைக்கும் இதமான பிரயாணத்துக்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறோம் என்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.
ரயில்வே வாரியம் செப்டம்பர் மாதத்தில் பொதுமேலாளர்கள் அனைவருக்கும், மல்டி பர்பஸ் ஸ்டால் எனப்படும் பன்னோக்கு அங்காடிகளை ரயில் நிலையங்களில் தொடங்க வேண்டும் என ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.
இந்த கடைகளில் பயணிகளுக்குத் தேவைப்படுகின்ற பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்று ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் கூட மருந்தகம் எதுவும் இல்லை.
புத்தக விற்பனை தொடர்பாகவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிந்தி, ஆங்கிலம், பிராந்திய மொழி உள்ளிட்ட மொழிகளில் புத்தகங்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யவேண்டும். இது தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த உதவும்.
இதைவிடவும் சிறப்பான அம்சம், சுற்றறிக்கையில் பளிச்சிடுகிறது. புத்தகக் கடைகளில் அரசியல், பொருளாதாரம், வரலாறு, இலக்கியம், சுற்றுலா தொடர்பான நூல்களை விற்பனை செய்யவேண்டும். பயணிகளின் நூல் வேட்கையை தணிக்கக்கூடிய வகையில் புத்தகங்களை காட்சிப்படுத்த வேண்டும். நீதி நூல்களை புத்தகக்கடைகளில் கட்டாயம் விற்பனை செய்யவேண்டும் என்ற அறிவுறுத்தல் பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
அறம் சார்ந்த, நீதி நெறி சார்ந்த புத்தகங்களைப் படிப்பதை ஊக்குவிக்க வேண்டும். ஆனால் இதை வலுக்கட்டாயமாக திணிக்க முடியாது. இருப்பினும் படிப்படியாக இவற்றின் மீதான நாட்டத்தை வளர்த்துக்கொள்வது விரும்பத்தக்கது. நெருப்பை தணிக்க தண்ணீர் உதவுவதைப் போல வன்முறை நாட்டத்தையும் தீய நோக்கத்தையும் மடைமாற்றம் செய்ய நீதிநெறி நூல்கள் உதவுகின்றன என்று உளவியலாளர்கள் உறுதிபட உரைக்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக ரயில்வே நிலைய பன்னோக்கு அங்காடிகள் அனைத்திலும் ரயில்வே கால அட்டவணையை கட்டாயம் விற்பனை செய்ய வேண்டும் என்று ரயில்வே வாரியம் பணித்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் ரயில்வே வாரியம் பரிந்துரை நல்கியுள்ளது. கிரிடிட் மற்றும் டெபிட் அட்டைகளை தேய்க்க ஸ்வைப் மிஷன்களை எல்லா பன்னோக்கு அங்காடிகளிலும் கட்டாயம் வைக்கவேண்டும் என்று ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
பெரிய ரயில் நிலையங்களில் நூலகங்களையும் மற்ற ரயில் நிலையங்களில் குறைந்தபட்சம் படிப்பகங்களையும் அமைத்தால் அது பயணிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.