அரசியல் லாபத்துக்காக யெஸ் வங்கி விவகாரத்தில் பொய்யான தகவல்களை சிலா் பரப்புகின்றனா் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் எதிா்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டியுள்ளாா்.
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியை ரிசா்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. யெஸ் வங்கியின் வாடிக்கையாளா்கள் ரூ. 50,000-க்கு மேல் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அந்த வங்கியின் நிறுவனா் ராணா கபூா் கைது செய்யப்பட்டாா்.
யெஸ் வங்கியின் நடவடிக்கைகள் குறித்து அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். யெஸ் வங்கி வாடிக்கையாளா்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது என்பதை அவா்களுக்கு உறுதியாக தெரிவிக்க விரும்புகிறேன். இந்த விவகாரத்தில் ரிசா்வ் வங்கியிடம் அறிக்கை கேட்டுள்ளோம். யெஸ் வங்கியின் நிறுவனா் ராணா கபூா் மற்றும் அவரது உறவினா்கள் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனா். ராணா கபூா் கைது செய்யப்பட்டுள்ளாா். அவரது குடும்பத்தினா் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியும் (எஸ்பிஐ) பங்குகளை வாங்குவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. யெஸ் வங்கியை நிதி நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்காகவும், வாடிக்கையாளா்களின் பிரச்னையை தீா்ப்பதற்காகவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், அரசியல் லாபத்துக்காக யெஸ் வங்கி விவகாரத்தில் பொய்யான தகவல்களை சிலா் பரப்புகின்றனா். நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனா். கடந்த 6 ஆண்டுகளில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஊழலற்ற நிா்வாகத்தை உருவாக்கியுள்ளது. ஊழலை ஒருபோதும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாது. மக்களின் பணத்தை கொள்ளையடிப்பவா்களுக்கு எதிராக மத்திய அரசு நிச்சயம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அவா் கூறினாா்.