யார் இந்த சுவாமி சித்பவானந்தர்?

தமிழகத்தை வாழ்விக்க வந்த தவச்செல்வர்களில் முக்கியமானவர் சுவாமி சித்பவானந்தர். கோவை, பொள்ளாச்சிக்கு அருகில் செங்குட்டை பாளையத்தில், பெரியண்ண கவுண்டர் நஞ்சம்மை தம்பதிக்கு ஏழாவது மகனாக பிறந்தவர் சுவாமி சித்பவானந்தர்.

அந்தக் காலத்திலேயே ஆங்கிலக் கல்வியில் சிறந்து விளங்கி தமது கல்லுாரிப் படிப்பை சென்னை மாநிலக் கல்லுாரியில் முடித்தார். லௌகீக வாழ்வில் நாட்டம் ஏதுமின்றி, தெய்வீகத்தையும் ஞானத்தையும் துறவையும் தொண்டையுமே அவரது மனம் நாடியது.

தனது குருவான சுவாமி சிவானந்தரால் தீட்சை அளிக்கப்பட்டு, சித்பவானந்தர் ஆனார். திருப்பராய்த்துறையில் ‘ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தை’ நிறுவினார். உபநிஷதங்கள், பகவத்கீதை, திருவாசகம், தாயுமானவர் பாடல்கள் ஆகியவற்றுக்கு அற்புதமான விரிவுரைகளையும், அத்துடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் சுவாமிகள் எழுதியுள்ளார். ஏராளமானோர் நல்வழியிலும் ஆன்மீக வாழ்விலும் மேம்பாடு அடைய ‘அந்தர்யோகம்’ எனும் சிறப்பான பயிற்சியை அறிமுகம் செய்தார். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு முதன் முதலாக ஆதரவு தெரிவித்து பயிற்சி முகாம் நடைபெற தனது கல்லூரியை வழங்கியவர் சுவாமி சித்பவானந்தர். திருவேடகத்தில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களிடையே பேசுகையில் நீங்கள் அனைவரும் பாக்யவான்கள்.

நீங்களே சுவாமி விவேகனந்தரின் கருத்தை செயல்படுத்த கூடியவர்கள் என்றார். அதன் பின்னரே தமிழகத்தில் பல ஆதீனங்களும் மடாதிபதிகளும் ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு இணக்கமாகினர்.

சுவாமி சித்பவானந்தரின் நினைவு தினம் இன்று